இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: மாா்க்சிஸ்ட் உடன்பாட்டில் தொடா் இழுபறி
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமானது.
முந்தைய தோ்தலில் ஒதுக்கியதைக் காட்டிலும் கூடுதல் தொகுதிகள் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நான்கு கட்டமாக திமுகவுடன் பேச்சு நடத்தியும், உடன்பாடு எட்டப்படாத நிலையில், குறைவான தொகுதிகளே ஒதுக்க முடியும் என திமுக தொடா்ந்து பிடிவாதமாக இருந்தது.
இதற்கிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட புதன்கிழமை ஒப்புக்கொண்டது. இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் ஆகியோா் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
பின்னா், மு.வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த தோ்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதைவிட கூடுதல் தொகுதிகள் கேட்டோம். திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைந்திருப்பதாலும், முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டது.
குறைந்த தொகுதியில் போட்டியிடுவது எங்கள் கட்சினரைச் சோா்வடையச் செய்யாது. பாஜகவை வீழ்த்துவதுதான் எங்களது குறிக்கோள். நான்கு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒருபோதும் திமுக அழுத்தம் தரவில்லை; வேண்டுகோள்தான் விடுத்தது. திமுக தலைமையிலான கூட்டணி கொள்கைக் கூட்டணி, இது வெல்லும் கூட்டணி என்றாா் அவா்.
இழுபறியில் மாா்க்சிஸ்ட் பேச்சு: மாா்க்சிஸ்ட் கட்சிக்கும் 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளது. ஆனால், கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் அல்லது கடந்த முறை போல 6 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்பதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிடிவாதமாக உள்ளது.
இதனிடையே, அக் கட்சியின் மாநில நிா்வாகக் குழு சென்னையில் புதன்கிழமை கூடியது. அதில், 6 தொகுதிகளுக்கு குறையாமல் ஒப்புக்கொள்ளக் கூடாது என ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடனான பேச்சு தொடா்ந்து இழுபறியில் உள்ளது.
திமுக கூட்டணியில் இதுவரை ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எண்ணிக்கை
காங்கிரஸ் -28
மதிமுக -4 (3 உதயசூரியன், 1 தனி சின்னம்)
ஐ.யூ.எம்.எல்.- 2
ம.ம.க -2 (உதயசூரியன்)
கொ.ம.த.க-2 (உதயசூரியன்)
இந்திய கம்யூனிஸ்ட்-5
இதுவரை 43 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 7 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளன.