நெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு: நெற்பயிர்கள் சேதம்
கார் சாகுபடி அறுவடை நடைபெற்று வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் தாமிரவருணி பாசனத்தில் சுமார் 100 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
கார் சாகுபடி அறுவடை நடைபெற்று வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் தாமிரவருணி பாசனத்தில் சுமார் 100 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
வடகிழக்கு பருவ மழை இம்மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் சாகுபடி பருவமும் ஒரு மாதம் தாமதம் ஏற்பட்டது. இதனால் அறுவடை செய்யும் பருவத்தில் தற்போது மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-6, பாபநாசம் கீழ் அணை-3, சேர்வலாறு அணை-43, மணிமுத்தாறு அணை-15.4, கடனாநதி அணை-5, ராமநதி அணை-30, கருப்பாநதி அணை-8, குண்டாறு அணை-7, அடவிநயினார் அணை-3, வடக்குபச்சையாறு அணை-69, நம்பியாறு அணை-5, கொடுமுடியாறு அணை-40.
மழை நீடிப்பு: நான்குனேரியில் அதிகபட்சமாக 156 மி.மீ மழையும், களக்காட்டில் 69 மி.மீ மழையும் பெய்துள்ளது. இது தவிர அம்பாசமுத்திரத்தில் 32.4 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 23.2 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 15 மி.மீ மழையும், மூலக்கரைப்பட்டி 42 மி.மீ மழையும், தென்காசியில் 10.8 மி.மீ மழையும், ஆய்க்குடியில் 30 மி.மீ மழையும், செங்கோட்டையில் 9 மி.மீ மழையும், ஆலங்குளத்தில் 27.2 மி.மீ மழையும் பெய்துள்ளது.
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தாமிரவருணி பாசனத்தில் அம்பாசமுத்திரம், கடையம், சேரன்மகாதேவி, ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், கீழஆம்பூர், பத்தடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல் பகுதியில் தற்போது கார் சாகுபடி அறுவடை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த சில தினங்களில் அறுவடை செய்யும் பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் மழைக்கு சாய்ந்து நீரில் மூழ்கி காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை இம்மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி, மூக்கூடல், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, பத்தமடை பகுதியில் மழை தொடர்ந்து பெய்தது. மழை நீடித்து வருவதால் அறுவடை செய்து நெல்லை கரை சேர்க்க முடியுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
கடனாநதி அணை மூடல்: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியி்ல மழை நீடித்து வருவதால் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை நீடித்து வருவதால் கடனாநதி அணை மூடப்பட்டது.
நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 63.05 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 75.66 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.55 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 52.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 47.50 அடியாகவும்,
கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 38.39 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 108.75 அடியாகவும், வடக்குபச்சையாறு அணையின் நீர்மட்டம் 4.00 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 10.73 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 3.00 அடியாகவும் இருந்தது.