சேலம் மாநகரில் சீன நாட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதைக் கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை புதன்கிழமை (அக்டோபர் 22) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு 3 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கொண்டாடங்கள் தொடங்கியுள்ளன. தீபாவளிக்காக புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மாநகரில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தீபாவளிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆணையர் அமல்ராஜ் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி முக்கிய வர்த்தக நிறுவனங்கள், கடை வீதிகளில் திருட்டு, செயின் பறிப்பு, நூதன முறையில் பொருள்களை பறித்தல் போன்ற சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாதாரண உடை அணிந்த காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் சமூக விரோதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
சி.சி.டி.வி. கேமிரா இல்லாத கடைகளில் கேமிராக்களைப் பொருத்தி கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள், ஆட்டோக்களில் பெண்கள், பொதுமக்கள் செல்லும்போது அவர்கள் கொண்டு வரும் பணம், அணிந்திருக்கும் அணிகலன்கள் மீது கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.
சேலம் மாநகரில் 140 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாமல் பட்டாசு கடைகளை நடத்தி வருபவர்கள் மீதும் உரிமம் உள்ள பட்டாசுக் கடைகளில் சரியான விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டாசுக் கடைகளில் தடை செய்யப்பட்ட சீனா பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் கண்காணித்து வரப்படுகிறது. தடை செய்யப்பட்ட பட்டாசு விற்பனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.