முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகம் முழுவதும் டெல்டா மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் கடும் அவதி

கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் காவிரி டெல்டா மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து நின்று போய் இருக்கும் நேரத்தில் சம்பா நெற் பயிர்களுக்கு யூரியா

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:08 AM
பகிர்:

தமிழகம் முழுவதும் காவிரி டெல்டா மாவட்டங்களில் யூரியா தட்டுபாட்டினால் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் காவிரி டெல்டா மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து நின்று போய் இருக்கும் நேரத்தில் சம்பா நெற் பயிர்களுக்கு யூரியா இடும் சரியான தருனமாகும். ஆனால் யூரியா கிடைக்காமல் தமிழகம் முழுவதும் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை 39,600 மெட்ரிக் டன் யூரியா தேவை. ஆனால் இந்த ஆண்டு 24,600 மெட்ரிக் டன் யூரியாதான் வந்துள்ளது. 15 ஆயிரம் மெட்ரிக் டன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காவிரி பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்தது: தமிழகத்திற்கு ஸ்பிக், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ், மங்களூர் கெமிக்கல்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் யூரியா தயாரித்து தமிழகத்திற்கு வழங்குகிறது. ஆனால் இந்த மூன்று நிறுவனங்களும் யூரியா உற்பத்தியை நிறுத்தியதுதான் தட்டுப்பாட்டிற்கு காரணமாகும். மேற்கண்ட நிறுவனங்கள் நாப்தா தொழில்நுட்பத்தின் மூலம் யூரியா உற்பத்தி செய்து வந்தது. மத்தியஅரசு புதிய அறிவுறுத்தலின்படி நாப்தாவிற்கு பதிலாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி யூரியா உற்பத்தி செய்ய வேண்டிய சூழல் மேற்கண்ட நிறுவனங்களுக்கு ஏற்பட்டதால் தற்போது உற்பத்தி நிறுத்தி வைத்துள்ளது. இயற்கை எரிவாயுவை பயன்படுத்தாவிடில் மத்திய அரசின் மானியத்தை பெற இயலும்.

இதனால் மேற்கண்ட தொழிற்சாலைகள் இயற்கை எரிவாயு மூலம் யூரியா உற்பத்தி செய்ய ஏதுவாக புதிய தொழில்நுட்பத்தை மாற்றி அமைத்து வருகிறது. மேலும் இயற்கை எரிவாயு ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப்படுகையிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவை பைப்லைன் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும். பைப் லைன் அமைப்பதற்கான பூர்வாக பணியை மாநிலஅரசும், முன்னாள் மத்திய உரத்துறை அமைச்சரான மு.க.அழகிரி ஆகியோர் தொடங்கப்படாததே காரணம். இந்த நிலையினால் தமிழகம் முழுவதும் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்கிறார் கே.வி.கண்ணன்பிள்ளை

என்எல்சி நிறுவனம் மீண்டும் யூரியா உற்பத்தி தொடங்க வேண்டும்

கடலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தது: யூரியா தட்டுப்பாடை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் ரூ.273-க்கு விற்பக்கப்பட வேண்டிய யூரியைவை ரூ.350 முதல் ரூ.450 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றன. யூரியா தட்டுபாடு ஏற்படும் எனத்தெரிந்த அரசு கூடுதலாக யூரியாவை இறக்குமதி செய்திருக்க வேண்டும். ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் யூரியா உற்பத்தி செய்து வந்தது. என்ன காரணத்தினாலோ அந்நிறுவனம் யூரியா உற்பத்தியை நிறுத்திவிட்டது. எனவே கடலூர் மாவட்ட விவசாயிகள் நலன் கருதி என்எல்சி நிறுவனம் யூரியா உற்பத்தியை மீண்டும் தொடங்க வேண்டும் என்கிறார் பி.ரவீந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.