பழனியில் சிவசேனா சார்பில் வினாயகர் ஊர்வலம். இஸ்லாமியர் வரவேற்பு
பழனியில் செவ்வாய்க்கிழமை சிவசேனா சார்பில் வினாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தின் போது இஸ்லாமிய பெருமக்கள்
பழனியில் செவ்வாய்க்கிழமை சிவசேனா சார்பில் வினாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தின் போது இஸ்லாமிய பெருமக்கள் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தனர்.
பழனியில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து மக்கள் கட்சி சார்பிலும், திங்கள்கிழமை இந்து முன்னணி, விஸ்வஹிந்து பரிஷத் சார்பிலும் வினாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. நிறைவு நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை சிவசேனா சார்பில் வினாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
அடிவாரம் பாதவினாயகர் கோயில் முன்பு துவங்கிய ஊர்வலத்தை சிவசேனா சார்பில் மாநில செயலாளர் சந்திரமோகன் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் 40 சிலைகள் பங்கேற்றன. ஊர்வலம் சன்னதிரோடு, பாளையம், பஸ்ஸ்டாண்டு, மார்க்கெட், பெரியகடைவீதி, தேரடி தெப்பக்குளம் வழியாக சண்முகநதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்று நீரில் கரைக்கப்பட்டது.
ஊர்வலம் பேருந்து நிலையம் காந்திசிலை அருகே வந்த போது முன்னாள் டவுன் தர்மபரிபாலன சங்க செயலாளர் கோட்டை அமீர் ஷாகுல்அமீது தலைமையில் சவுக்கத்அலி, அப்பாஸ், ராஜாமுகமது, சி.சாகுல்அமீது, முகமது அலி, அன்சாரி உள்ளிட்டோர் வந்திருந்து ஊர்வல நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பதிலுக்கு வினாயகர் சிலை கமிட்டியினரும் காவிதுண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ஊர்வலத்துக்கு ஏடிஎஸ்பி., சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார், ஊர்க்காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோட்டாட்சியர் சுந்தர்ராஜ், வட்டாட்சியர் மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமான வருவாய் துறை அலுவலர்களும் ஊர்வலத்தின் போது கண்காணிப்பில் ஈடுபட்டனர்.