நள்ளிரவு வரை நீடித்த இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு: நெல்லையில் 115 பேருக்கு பணி நியமன ஆணை
திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நள்ளிரவு 11 மணி வரை நீடித்தது. 116 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் ஒருவர் மட்டும் பங்கேற்கவில்லை. பங்கேற்ற 115 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நள்ளிரவு 11 மணி வரை நீடித்தது. 116 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் ஒருவர் மட்டும் பங்கேற்கவில்லை. பங்கேற்ற 115 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2,353 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தமாக 14,700 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்குவதற்கான கலந்தாய்வு ஆக. 30 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதுநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் 65 பேர் பணிநியமன ஆணைகள் பெற்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திற்குள் காலிப்பணியிடம் இல்லாததால் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு (மாவட்டத்திற்குள்) திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனால், வெளிமாவட்டங்களில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணைகள் வழங்குவதற்கான கலந்தாய்வு சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 116 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 10 மணிக்குத் தொடங்கிய கலந்தாய்வு நள்ளிவரவு வரை நீடித்தது. நள்ளிரவு 11 வரை நீடித்தது. கலந்தாய்வில் பங்கேற்ற 115 பேருக்கும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒருவர் மட்டும் பங்கேற்கவில்லை.
தொடர்ந்து புதன்கிழமை (செப்.3) பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் உள்ள காலிப்பணியிடங்கள்), 4, 5 ஆம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள்) கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.