பழனி திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மஹாகும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பழனி அருள்மிகு
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி திருஆவினன்குடி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மஹாகும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மஹாகும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் முக்கிய உபகோயிலாக விளங்குவது அடிவாரம் திருஆவினன்குடி கோயில். பாடல்பெற்ற தலமான இங்கு குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த சிலமாதம் முன்பு இந்து சமய அறநிலையத்துறை மூலம் சுமார் ஒருகோடி மதிப்பீட்டில் கும்பாபிஷேக பணிகள் துவங்கியது. கோயிலில் உள்ள கல்தூண் சிற்பங்களின் எண்ணெய் முழுக்குகள் பிரத்யேகமான கெமிக்கல்கள் சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிலைகளின் நுணுக்கமான வேலைப்பாடுகள் தற்போது சிறப்பாக காட்சியளிக்கிறது.
வாயிற்கோபுரம் இராஜகோபுரம், மூலவர் கோபுரம், கைலாசநாதர் சன்னதி உள்ளிட்ட பல்வேறு கோபுரங்களின் சுதைகள் முற்றிலும் சீர் செய்யப்பட்டு புதிய வர்ணம் பூசப்பட்டு கோபுரம் வண்ணமயமாக்கப்பட்டது. அருள்மிகு சனீஸ்வரர் சன்னதிக்கு புதிய கோபுரம் நிறுவப்பட்டது. மயில் மண்டபத்தில் புதிய டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு கும்பாபிஷேக வேலைகள் நிறைவடைந்த நிலையில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி, அருள்மிகு துர்க்கை, நுழைவாயில் வெள்ளி கவசங்கள் பாலீஷ் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. தொடர்ந்து திங்கள்கிழமை விநாயகர் பூஜையுடன் யாகசாலை பணிகள் துவங்கியது. ஒருவார காலம் நடைபெற்ற இந்த பூஜையின் போது ஆறுகால பூஜைகள் நடத்தப்பட்டு திருமறை, சிவாகமம், திருமுறைகள் பாடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹூதி முடிந்த பின் ஆறுமணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மேளதாளம், சிவதாளம் முழங்க கோபுர விமானங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
காலை 6.40 மணியளவில் அருள்மிகு குழந்தை வேலாயுதசாமி மற்றும் அருள்மிகு வேலீஸ்வரர் விமானம், இராஜகோபுரம், அருள்மிகு சனீஸ்வரர் சன்னதி கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களில் உள்ள விமானங்களுக்கும் சமகால மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விமானங்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக தீர்த்தம் பக்தர்களுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தெளிக்கப்பட்டது. மூலவர் குழந்தை வேலாயுதசாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்ற பின் சுமார் பத்தாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயிலின் உட்புறம் புஷ்பகைங்கர்ய சபா சார்பில் மலர்ப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. யாகசாலை பூஜைகளை அமிர்தலிங்கம் குருக்கள். செல்வசுப்ரமண்யகுருக்கள் தலைமையில் ஏராளமான சிவாச்சார்யார்கள் செய்திருந்தனர். பக்தர்கள் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 400 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், காலை 4 மணி முதல் 8 மணி வரை வாகன போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக டிஐஜி., அறிவுச்செல்வம், மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், எம்பி., உதயகுமார், எம்எல்ஏ., வேணுகோபாலு, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், கந்தவிலாஸ் செல்வக்குமார், பாஸ்கரன், ஹோட்டல் கண்பத் ஹரிஹரமுத்து, திருப்பூர் லாட்ஜ் மகேஷ், முருகனடிமை பாலசுப்ரமணியம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.