தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் விபத்துக்களை தடுக்கும் வகையில் தனியார் பட்டாசு ஆலைகளை தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக வருவாய்த்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அலுவலர்களை கொண்ட 6 குழுக்கள்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் விபத்துக்களை தடுக்கும் வகையில் தனியார் பட்டாசு ஆலைகளை தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக வருவாய்த்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அலுவலர்களை கொண்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் ஆகிய வட்டார பகுதிகளில் பட்டாசு ஆலைத் தொழிலே முதன்மையான தொழிலாக நடந்து வருகிறது. இங்கு மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற 167 ஆலைகளும், சென்னை மற்றும் நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்ற 698 ஆலைகள் என மொத்தம் 865 ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், மறைமுகமாகவும், நேரடியாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் வரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றப்படாமலும், போதிய பயிற்சி இல்லாமல் கவனக்குறைவாகவும் தொழிலாளர்கள் ஈடுபடுவதால் தான் வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும், ஒண்டிப்புலிநாயக்கனூர், கண்மாய்பட்டி, கன்னிசேரி, குல்லூர்சந்தை, ஆர்.ஆர்.நகர், சங்கரலிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் எவ்வித அனுமதியின்றியும்    வீடுகளிலும், தோட்டப்பகுதிகளில் கூடாரம் அமைத்து கருந்திரி, வெள்ளைத்திரிகளை  தயாரிக்கின்றனர்.

இதுவரையில் சட்டவிரோதமாக வீடுகள் மற்றும் கூடாரம் அமைத்து கருந்திரி மற்றும் பட்டாசுகள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேரும், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 11 பேரும் உயிரிழந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தற்போது, தீபாவளி திருநாளுக்கு 40 நாள்களே உள்ள நிலையில் தனியார் ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், இப்பகுதியில் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. அதனால் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கூறுகையில், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றனவா, ஆலைகளில் சீன பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். அதிலும், விதிமுறை மீறிய ஆலைகள் மீது உற்பத்திக்கு தடை விதித்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் இத்துறையினரின் ஆய்வு வருகிற 14-ம் தேதியோடு முடிகிறது. அவ்வகையில் விபத்துக்குள்ளான காரிசேரி பட்டாசு ஆலையும் உற்பத்திக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதையும் மீறி ஆலை அருகே கூடாரத்தில் பாதுகாப்பு இல்லாமல் பட்டாசு தயாரித்த போதுதான் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்வதற்காக வருவாய் துறை, தீயணைப்பு துறை, தொழிலக பாதுகாப்புத்துறை அலுவலர்களை கொண்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர், சாத்தூர், சிவகாசி ஆகிய வட்டாரப் பகுதிகளில் தலா 2 குழுவினர் பட்டாசு ஆலைகளில் பின்பற்றப்படும் தொழிலாளர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக ஆய்வு செய்யவுள்ளனர். இக்குழுவினர் வருகிற தீபாவளி ஒரு வாரத்திற்கு முன்பு வரையில் இரவும், பகலும் தொடர்ந்து சுழற்சி முறையில் ஆய்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் விதிமுறை மீறும் ஆலைகள் மீது கட்டாயம் உற்பத்திக்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT