சேலம் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கூட்ட அரங்கிற்குள் நுழைந்த தேமுதிக எம்.எல்.ஏ. ஆணையரிடம் மனுவைக் கொடுத்துவிட்டு, அவரை கடிந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநகராட்சிக் கூட்டத்தில் துணை மேயர் நடேசன் பேசிக் கொண்டிருந்தபோது, வடக்கு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ.வும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான அழகாபுரம் மோகன்ராஜ் கையில் ஒரு மனுவுடன் கூட்ட அரங்கிற்குள் திடீரென நுழைந்தார்.
ஆணையர் முன்பு சென்ற அவர் அந்த மனுவை அவரிடம் வழங்கினார். அதைப் பெறுவதற்கு ஆணையர் க.இரா.செல்வராஜ் தயக்கத்துடன் எழுந்தார். இதனால் அவரைப் பார்த்துப் பேசிய மோகன்ராஜ், நான் ஒரு எம்.எல்.ஏ. எனக்கு மரியாதை இல்லையா மனுவை எழுந்து வாங்க முடியாதா என்று கேட்டார். பின்னர் மனுவைக் கொடுத்துவிட்டு அரங்கிலிருந்து சென்றார்.
இதற்கிடையே மனு அளிக்க வந்த மோகன்ராஜை, மேயர் செüண்டப்பன் வந்து அமருங்கள் என்றும், துணை மேயர் நடேசன் புன்னகையுடன் சென்று வாருங்கள் என்றும் கூறினர். இருப்பினும் கூட்ட அரங்கில் இருந்த அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும், தேமுதிக எம்.எல்.ஏ.வின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று நடேசனும் கூறினார். கூட்ட அரங்கில் அனுமதியின்றி நுழைந்து ஆணையரை அவமதித்துச் சென்றதாகக் கூறி மேயரும் கண்டனம் தெரிவித்தார். இருப்பினும் சமாதானம் அடையாத அதிமுக உறுப்பினர்கள், எம்.எல்.ஏ. மீது காவல்துறையில் புகார் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து ஆணையர் கூறும்போது, சம்பவம் நடைபெற்ற இடம் மேயரின் கட்டுப்பாட்டில் இருந்த இடம் எனவே அவர்தான் புகார் தெரிவிக்க வேண்டும் என்றார். மேயர் கூறும்போது, இது குறித்து ஆணையர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.