நெல்லையில் மக்களை வதைத்த மழையும், வெப்பமும்!
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மழை பரவலாக பெய்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்தது. மழை பெய்து ஓய்ந்த அடுத்த சில நிமிடங்களில் கடும் வெப்பம் நிலவியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மழை பரவலாக பெய்து வருகிறது.ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி கருப்பாநதி அணையில் அதிகபட்சம் 74 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 40 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடனாநதி அணையில் 1 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 9 மி.மீ மழையும் பெய்துள்ளது.
மழையும், வெப்பமும்: திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணி வரை வெப்பம் கடுமையாக இருந்தது. அடு்த்த ஒரு மணி நேரம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் இடியுடன் பலத்த மழை பெய்தது. மழையால் மாநகரில் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மேலப்பாளையத்தில் பிரதான சாலையின் இருபுறமும் கழிவு நீர் ஓடைகளில் தேங்கி இருந்தது. மழையால் வெளியேறிய கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.மேலப்பாளையத்தில் பல்வேறு தெருக்களில் மழை நீரும், கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது.இடியுடன் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் வெப்பம் குறைந்து காணப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மாநகர பகுதியில் மீண்டும் வெப்பம் நிலவியதால் மழை பெய்ததற்கான அறிகுறி இல்லாதது போல் காணப்பட்டது.
பலத்த மழை: இதேபோல் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், காருக்குறிச்சி, கூனியூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, பேட்டை, முக்கூடல் உள்பட இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது.அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 76.65 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 83.96 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.40 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 61.20 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 54.50 அடியாகவும்,கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 37.73 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும் இருந்தது.
நீர்மட்டம் உயர்வு: நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அடவிநயினார் அணை, கருப்பாநதி அணைகளின் நீர்வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 45 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 108 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 1.50 உயர்ந்து 37.73 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 3.25 அடி உயர்ந்து 06.75 அடியாகவும் இருந்தது. வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 4.00 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 8.46 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 8.00
அடியாகவும் இருந்தது. பாசனம், குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் 905 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் 10 கனஅடியும், கடனாநதி அணையில் 105 கனஅடியும், ராமநதி அணையில் 40 கனஅடியும், அடவிநயினார் அணையில் 20 கனஅடியும், கருப்பாநதி அணையில் 10 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.