மே.18-ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம்: சிஐடியூ மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே.18-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியூ மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் குற்றம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே.18-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியூ மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் குற்றம் சாட்டினார்.
கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் மந்த நிலை நீடிக்கிறது. அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்கள் உள்ளன. இதனை பூர்த்தி செய்ய தமிழக அரசு தயாராக இல்லை. அனைத்து துறையிலும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையே உள்ளது. எனவே சிஐடியூ குறைந்த பட்ச ஊதியமாக அனைவருக்கும் ரூ.15 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. இதனை தமிழக அரசு சட்டமாக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மே 18-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டங்களை நடத்த சிஐடியூ முடிவு செய்துள்ளது.
கூட்டுறவு துறையில் பொது விநியோக திட்டத்தில் அரசு உண்மைக்கு மாறான விபரங்களை கொடுக்கின்றன, மக்களை திசை திருப்பும் வேலையில் ஈடுபடுகின்றனர். பொருட்களை சாக்குகளில் அனுப்புவதற்கு பதிலாக கிலோ கணக்கில் பாக்கெட் செய்து அனுப்பினால் மக்களுக்கு எடை குறைவு வராது, எடை குறைவாக பொருட்களை இறக்கவும் மாட்டார்கள். சரக்குகள் இருப்பு குறைவதற்கும், ஊழியர்கள் பாதிப்பிற்குள்ளாகும் நிலையிலிருந்து விடுபடுவார்கள்.
சட்டமன்றத்தில் எந்த பிரச்சனை மீதும் விவாதம் என்பது கிடையாது. ஏற்கனவே முதல்வராக இருந்த ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவித்தார், அதில் எதுவுமே அமுலாகாத நிலை உள்ளது, குறிப்பாக மருத்துவக்காப்பீட்டு திட்டம் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது இன்று வரை முழுமையாக அமுலாகவில்லை, ஏராளமான அறிவிப்புகள் வாக்கு வங்கியை மட்டும் மனதில் வைத்து அறிவிப்பு மட்டும் வெளியாகிறது.
இன்னெருபக்கம் தமிழகத்தில் புதிய தொழில் வந்தால் அதை சொந்தம் கொண்டாடுவதற்கு தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டுள்ளன. அந்த தொழில் மூப்படும் என்று சொன்னால், நலிவடையும் என்றால் இரண்டு பேரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர், குறிப்பாக
நோக்கியா, பாஸ்ரான் கம்பெனிகள் மூடப்பட்டன. இது 35 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட பிரச்சனை. இந்த தொழிற்சாலைகள் மூடப்பட்ட பிறகு மாநில அரசோ, மத்திய அரசோ, இங்குள்ள அதிமுக, திமுக கட்சிகளோ இதைபற்றி கண்டு கொள்ளவே இல்லை. சிஐடியூ பல கட்ட போராட்டம் நடத்திய பிறகு மாநில அமைச்சர் சொல்கிறார் மத்திய அரசை கேட்க வேண்டும் என்று, மத்திய அரசு சொல்கிறது எங்களுக்கு சம்மந்தம் இல்லை என்று. நோக்கியா பிரச்சனையை தீர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுத்திருந்தால் மூடப்பட்டிருக்காது.
15 ஆண்டுகால போராட்டத்திற்கு பின் தான் நல வாரியங்களை அரசு உருவாக்கியது. தற்போது அதனை முடக்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசு தனியாக நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும், மற்ற துறைகளில் இருந்து திருப்பி விடக்கூடாது. தற்போது நலவாரிய சலுகை படிவங்களில் என்னசாதி என்று கேட்கும் நிலை உள்ளது. நலவாரிய செயல்பாடுகளில் தொழிலாளர் துறையை சார்ந்த செயல்பாடாக இருக்க வேண்டும் இன்னொரு துறை அதில் தலையிடக்கூடாது. ஆதார் அட்டையை கேட்கக்கூடாது என்று உச்ச நீதி மன்றம் சொன்ன பிறகும் நலவாரியங்களில் ஆதார் அட்டை கேட்பது உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்காத போக்குதான் நிலவுகிறது என ஜி.சுகுமாறன் தெரிவித்தார்.
பேட்டியின்போது கூட்டுறவு சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, செயல் தலைவர் ஆர்.ஜீவானந்தம், சிஐடியூ மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் ஆகியோர் உடனிருந்தனர்.