விருதுநகரில் கிறிஸ்துவ தேவலாயங்களில் சனிக்கிழமை நள்ளிரவில் ஈஸ்டர் உயிர்ப்பு ஞாயிறு நாளை முன்னிட்டு நடந்த கூட்டுத் திருப்பலி மற்றும் மறையுரை வழங்கும் நிகழ்ச்சியில் கிறிஸ்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் மறைமாவட்ட அதிபரும் பங்குத் தந்தையுமான எஸ்.ஞானபிரகாசம் அடிகளார், துணை பங்குதந்தை ஜே.தாமஸ் எடிசன் அடிகளார், சூலக்கரை டோமினிக் அடிகளார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், சனிக்கிழமை 11 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, திருஒளி வழிபாடு, இறைவார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு மற்றும் ஈஸ்டர் உயிர்ப்பு ஞாயிறு கூட்டுத்திருப்பலியும், மறையுரை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழந்ததை நினைவு கூறும் திருப்பலி பீடத்தின் அருகில் இயேசு கிறிஸ்து காட்சி கொடுப்பது போல் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
மேலும், அதற்கு முன்னதாக மாலையில் உயிர்த்தெழுந்த ஆண்டவரின் தேர்பவனியும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், விருதுநகர் பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜெசப் அடிகளார் தலைமையிலும், ஆர்.ஆர்.நகர் தூயவேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குதந்தை ஜான் மார்டின் அடிகளார் தலைமையிலும் நடைபெற்றது.
ஏற்கனவே இப்பகுதி தேவாலங்களில் பெரிய வியாழன், புனிதவெள்ளி, பெரிய சனியுடன் ஈஸ்டர் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், பெரிய வியாழன் அன்று இறைவார்த்தை வழிபாடு, 12 சீடர்களின் பாதம் கழுவும் சடங்கு, திருவிருந்து மற்றும் நற்கருணை இடமாற்ற பவனியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புனித வெள்ளியன்று இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்படும், 14 பாடுகளை தியானிக்கும் சிலுவை பாதை வழிபாடும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.