முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு: நெல்லையில் 2 ஆவது நாளாக முற்றுகை, மறியல், ஆர்ப்பாட்டம்

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் முற்றுகை, மறியல், ஆர்ப்பாட்டம்

Updated On : 9 ஏப்ரல், 2015 at 6:24 PM
பகிர்:

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் முற்றுகை, மறியல், ஆர்ப்பாட்டம் ஆகியவை நடைபெற்றன.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட வனப்பகுதியிலிருந்து செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆந்திர அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் திருநெல்வேலியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஆந்திரா வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. ஆந்திரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அனைத்து காவலர்களையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக, ஆந்திர அரசுகள் தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.போராட்டக்குழுவினர் வங்கி வளாகத்துக்குள் நுழைய முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையர் கந்தசாமி, திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் ரகுபதிராஜா ஆகியோர் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 17 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Advertisement

ஆர்ப்பாட்டம்:ஆந்திர அரசின் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, தமிழர் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலர் தௌ.அப்துல்ஜப்பார் தலைமை வகித்தார். தமிழர் தேசிய முன்னணி மாவட்டச் செயலர் இ.தமிழீழன் முன்னிலை வகித்தார். தமிழர் உரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு, உலகத்தமிழின முன்னேற்றக் கழக நிர்வாகி ஞா.பாரதிதாசன், எஸ்.பி.மைதீன், ஜாபர், ஜமால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சாலைமறியல்:

ஆந்திர அரசைக் கண்டித்து திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் ரஹ்மத்நகரில் சாலைமறியல் நடைபெற்றது. திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் நடைபெற்ற மறியலால் சில நிமிடங்கள் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு மாணவர்கள், சாலைமறியலைக் கைவிட்டு கல்லூரி வளாகத்துக்குள் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.