விருதுநகர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கடத்தப்பட்ட 2 ஆயிரம் கருந்திரி கட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக இளைஞர் ஒருவரையும் கைது செய்தனர்.
விருதுநகரை அடுத்த கன்னிசேரி-முதலிப்பட்டி சாலையில் எவ்வித அனுமதியில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை வாகனத்தில் கடத்திச் செல்வதாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சனிக்கிழமை காலையில் குறிப்பிட்ட சாலையில் வாகனத்தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த சாலை வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உள்ளே பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் 2 ஆயிரம் கருந்திரி கட்டுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்தவர் ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்(25) என்பதும், ஒண்டிப்புலியில் உள்ள ரபீக் நடத்தி வரும் பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்வதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
உடனே வாகனத்துடன் கருந்திரி கட்டுக்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் என்பவரை கைது செய்தனர். மேலும், பட்டாசு ஆலை உரிமையாளர் ரபீக், முகவர் குமார் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.