விராலிமலையில் வெடிப் பொருட்களை ஏற்றி வந்த லாரியில் தீ
விராலிமலை திருச்சி நான்கு வழிச்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடிப் பொருட்களை ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்ததால், திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
சிவகாசியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையிலிருந்து வியாழக்கிழமை பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்த லாரி விராலிமலை நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்த போது, லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது. சாலையின் நடுவே ஏற்பட்ட இந்த தீவிபத்தினால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணிநேர போரட்டத்துக்கு பின் தீயையணைத்தனர். விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் தலைமையில் போலிஸார் போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர். லாரி ஓட்டுநர் சிறுகாயங்களுடன் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.