முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளி ஆண்டு விழாவுக்கு பணம் தராத மாணவிகளை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய ஆசிரியர்

காரைக்கால்  தனியார் பள்ளி ஆண்டு விழாவுக்கு பணம் செலுத்தாத மாணவிகள் இருவரை,

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:11 AM
பகிர்:

காரைக்கால்  தனியார் பள்ளி ஆண்டு விழாவுக்கு பணம் செலுத்தாத மாணவிகள் இருவரை, பள்ளி ஆசிரியை பிரம்பால் தாக்கி காயப்படுத்தியதால் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆசிரியை மீது போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காரைக்கால் மேலகாசாக்குடி பகுதியில் குட்ஷெப்பெர்டு ஆங்கிலப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பள்ளி மாணவ மாணவிகளிடம் ரூ.1,200 தொகையை வசூலித்துவருவதாக கூறப்படுகிறது. இபள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் கோட்டுச்சேரியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகள் காவியலட்சுமி (12), மணிவண்ணன் மகள் தர்ஷினி (12) ஆகியோர் குறி்த்த தேதியில், பள்ளி நிர்வாகம் கோரிய தொகையை செலுத்தவில்லையென கூறப்படுகிறது.

வழக்கம்போல் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவிகளை தமிழாசிரியை அமுதவல்லி என்பவர் அழைத்து, ஆண்டு விழாவுக்கான பணம் ஏன் செலுத்தவில்லையென கேட்டாராம். இதற்கு சரியான பதில் அளிக்க முடியாத மாணவிகள் இருவரையும் பிரம்பால் அடித்துள்ளார். இதில் காவியலட்சுமிக்கு ஒரு கையில் பல்வேறு இடங்களில் காயமேற்பட்டு, கை முழுவதும் சிகப்பு நிறமாக மாறியது. தர்ஷினிக்கும் லேசான காயமேற்பட்டது.

பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றனர் மாணவிகள்.  அவர்களது பெற்றோர் வெளியூருக்கு சென்றுவிட்டு இரவு வீடு வந்தபோது, காவியலட்சுமிக்கு காய்ச்சல் இருப்பதை அறிந்துகொண்டு விசாரித்தனர். அப்போது ஆசிரியை தாக்கிய விவரத்தை கூறியுள்ளார். பக்கத்துவீட்டில் உள்ள மாணவி தர்ஷினியை கேட்டபோது, அவரும் சுகவீனம் அடைந்து படுத்திருந்தது தெரியவந்தது.

மாணவிகள் இருவரையும் பெற்றோர் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு இரவு 10.30 மணியளவில் சிகிச்சைக்காக  அழைத்துச் சென்றனர். இவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இதுகுறித்து பெற்றோர் நெடுங்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உதவி ஆய்வாளர் பெருமாள், மாணவிகளை  தாக்கி காயப்படுத்திய ஆசிரியை அமுதவல்லி மீது இரு பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார். காரைக்காலில் தனியார் பள்ளிகள் ஆண்டு விழா என்ற பெயரில் அதிக ரூபாயை கட்டணமாக வசூலிப்பில் ஈடுபடுவதாகவும், மாணவர் சேர்க்கையில் போதிய சீட் இல்லையென கிராக்கி காட்டி, பல ஆயிரம் ரூபாயை வசூலிக்கிறது. இதுபோன்ற கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள், நீதிபதி, அமைச்சர், எம்.எல்.ஏ, ஆட்சியர், காவல்துறை அதிகாரி போன்ற அதிகாரமிக்கவர்களை ஆண்டு விழா, பரிசளிப்பு விழாக்களுக்கு அழைத்து சிறப்பு செய்துவிடுவதால், இவர்களோ பள்ளி நிர்வாகத்தின் தவறுகளை தட்டிக்கேட்க முற்படுவதில்லையென பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →