கண்மாய் குளங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட வருவாய் அலுவலர்
கண்மாய் குளங்களில், ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தெரிவித்தார்.
கண்மாய் குளங்களில், ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தலைமை வகித்தார். வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சுப்பையா முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் நில எடுப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு தூக்கிட்டு உயிரிழந்த விவசாயி கஜேந்திர சிங்கிற்கு அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் அனைவரும் கருப்பு கொடி குத்தி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ராமசுப்பிரமணியராஜா(மா விவசாயிகள் சங்கம்): கரும்புக்கு அரசு அறிவித்த கூடுதல் விலையை தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு இதுவரையில் வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது. வன விலங்குகளான காட்டுப்பன்றிகள், மான்கள், யானை ஆகியைகளை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. அதற்கான நஷ்டஈடுத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றார்.
Advertisement
அம்மையப்பன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து, பாசிபயறு உள்ளிட்ட பயறு வகைகளில் வைரஸ் நோய் தாக்குதல் காரமமாக இலை மஞ்சளாகி சுருண்டும், பயறு பிடிப்பு இல்லாமல் உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணத்தை வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
அழகர்சாமி(விவசாயி): கூமாபட்டி, கொடிக்குளம் ஆகிய பகுதிகளில் கண்மாய்கள் மற்றும் வாய்க்கால் ஆகியவைகள் ஆக்கிரமித்து வருவதால் மழைக்காலங்களில் தண்ணீர்தேக்கி வைக்க முடியவில்லை. இப்பகுதியில் 300 ஹெக்டேர் விளைநிலங்களில் விவசாயம் பாதிக்கப்படும் நிலையிருப்பதால் உடனே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது தொடர்பாக மனுக்கள் அளித்தாலும் உரிய பதில் ஏதும் அதிகாரிகள் அளிக்கவும் முன்வரவில்லை என்றார்.
விஜயமுருகன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர்): பெரும்பாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்பாகவும், வேளாண்மை தொடர்பாகவும் மனுக்கள் அளிக்கப்படுகிறது. ஆனால் அதற்கான பதிலை அளிப்பதற்கு கோட்டாட்சியர்கள், அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்பது இல்லை. இனிமேல் ஒவ்வொரு கூட்டங்களிலும் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்றார்.
இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி பதலளித்து பேசுகையில், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை தனியார் ஆலைகள் வழங்குவதற்கான முத்தரப்பு கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் உடனே வனத்துறை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். கண்மாய் குளங்கள் மற்றும் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அந்தந்த பகுதி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மூலம் அகற்றப்படும். விவசாயிகளிடம் பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட மனுக்கள் பரிசீலனையில் உள்ளதால் தாமதம் ஆகலாம். இனிமேல் பதில் அளிக்கும் வகையில் உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்க வலியுறுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில் கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் குருசாமி, வனத்துறை கோட்ட அலுவலர் அசோக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வாக்குவாதம்: இக்கூட்டத்தில் ராமசுப்பிரமணியராஜா மற்றும் அமையப்பன் ஆகியோர் உழுந்து, பாசிப்பயறு வகைகளில் வைரஸ் நோய் தாக்குதலால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். அதற்கு வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சுப்பையா வெயில் காலத்துல அப்படித்தான இருக்கும் என ஆவேசமாக பேசியதை தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் சமதானம் செய்து வைத்தனர். இதனால் வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.