பாஜக உறுப்பினர் சேர்க்கைக்காக 234 முழுநேர ஊழியர்கள் நியமனம்
பாஜக உறுப்பினர் சேர்க்கைக்காக 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 234 முழுநேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக உறுப்பினர் சேர்க்கைக்காக 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 234 முழுநேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பாஜக, அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் ஆகிய 7 மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி சென்னை மறைமலை நகர் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டுமானால் ஒரு வாக்குச் சாவடிக்கு 100 பேர் வீதம் 60 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
டிசம்பர் 21-ஆம் தேதி மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், 60 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வாக்குச் சாவடிக்கு ஒருவர் வீதம் 60 ஆயிரம் பொறுப்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இந்தப் பணிக்காக சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒருவர் என 234 முழுநேர ஊழியர்களை நியமிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து முழுநேர ஊழியர்களாக செயல்பட 600 நபர்களிடம் நேர்காணல் நடத்தி அவர்களில் 234 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி முகாம் ஜனவரி 2-ஆம் தேதி பூந்தமல்லியில் நடைபெற்றது.
இது தொடர்பாக பாஜக மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜூலு தினமணி செய்தியாளரிடம் கூறியது:
வாக்குச் சாவடிக்கு 100 பேர் வீதம் 60 லட்சம் உறுப்பினர்கள் என்ற இலக்குடன் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 1-ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. இரு மாதங்களாக உறுப்பினர் சேர்க்கைக்கான அமைப்புப் பணிகளில் கவனம் செலுத்தினோம். ஆனாலும் இந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் 5,40,000 பேர் மிஸ்டுகால் மூலம் உறுப்பினர்களாக இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தற்போது 234 தொகுதிகளுக்கும் முழுநேர ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக ஒவ்வொரு முழுநேர ஊழியரும் அவரவர் தொகுதியில் உள்ள ஒரு ஒன்றியம் அல்லது நகரை தேர்வு செய்து அங்கு உறுப்பினர் சேர்க்கை பணியை முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
இப்பணியைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு உதவவும் 5 ஒன்றியங்களுக்கு ஒருவர் என 120 பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர் சேர்க்கைக்கு கடைசி நாளான மார்ச் 31-ஆம் தேதிக்குள் 60 லட்சம் உறுப்பினர்கள் என்ற இலக்கை அடைவோம்.
ஜனவரி 24, 25, 26 ஆகிய மூன்று நாள்களும் தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளோம். இப்பணியில் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் ஈடுபடுவார்கள். இன்னும் ஒரு வாரத்தில் 60 ஆயிரம் வாக்குச் சாவடிகளுக்கும் பொறுப்பாளர்களை தேர்வு செய்யும் பணி முடிந்து விடும் என்றார் எஸ். மோகன்ராஜூலு.