காட்டுமன்னார்கோயில் இலங்கை அகதிகள் முகாமில் கடலோர காவல் படை ஐஜி கே.சொக்கலிங்கம் ஆய்வு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் இலங்கை அகதிகள் முகாமில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கியுள்ளார்களா என கடலோர காவல்படை ஐஜி கே.சொக்கலிங்கம் செவ்வாய்க்கிழமை ஆய்வு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் இலங்கை அகதிகள் முகாமில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கியுள்ளார்களா என கடலோர காவல்படை ஐஜி கே.சொக்கலிங்கம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
காட்டுமன்னார்கோயிலில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. முகாமில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 238 பேர் தங்கியுள்ளனர். இந்நிலையி்ல் கடலோர காவல் படை ஐஜி சொக்கலிங்கம் செவ்வாய்க்கிழமை முகாமில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அகதிகள் தங்களுக்கு கழிப்பிட வசதி வேண்டும், கட்டடங்களின் மேற்கூரையிலிருந்து நீர் கசிவு ஏற்படுகிறது என்றும், நுழைவாயிலில் பாதுகாப்பிற்கு கதவு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக ஐஜி கூறினார். பின்னர் அகதிகள் தங்களுக்கு குடியுரிமை வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த ஐஜி, ஏற்கனவே இந்தியாவில் பர்மா, பங்களாதேஷ் நாடுகளின் அகதிகள் பல ஆண்டுகளாக உள்ளனர். அவர்களுக்கே குடியுரிமை வழங்கப்படவில்லை. குடியுரிமை வழங்குவது குறித்து மத்தியஅரசுதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இலங்கை தமிழர் அருள்செல்வம் என்பவர் இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களின் புகைப்படங்களை எடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. முகாமிற்கு சந்தேகப்படும் படியான நபர்கள் வந்தால் உடனடியாக கியூ பிராஞ்சு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஐஜி கே.சொக்கலிங்கம் தெரிவித்தார்.
ஐஜியுடன் வட்டாட்சியர் ஆர்.பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், இளையராஜா உள்ளிட்டோர் உடன் வந்தனர்.