முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒருதலைக்காதலில் 9-ம் வகுப்பு மாணவி குத்திக்கொலை: காதலனும் கத்தியால் குத்தி தற்கொலை முயற்சி

சின்னதாராபுரம் அருகே ஒருதலைக்காதல் தகராறில் புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற 9-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக்

Updated On : 7 ஜனவரி, 2015 at 7:40 PM
பகிர்:

சின்னதாராபுரம் அருகே ஒருதலைக்காதல் தகராறில் புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற 9-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு காதலனும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள ரெங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(45). கொத்தனார். இவரது மனைவி ஈஸ்வரி(35). இவர்களது மகள் பாரதிபிரியா(14). இவர் சின்னதாராபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் மனோஜ்(24). கொத்தனார். இவர் பாரதிபிரியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பாரதிபிரியா பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து சென்று தொல்லைக் கொடுத்து வந்துள்ளார். இதனிடையே கடந்த மாதம் மனோஜ் ஈஸ்வரன் வீட்டிற்குச் சென்று உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து தாருங்கள் எனக்கூறியுள்ளார். அதற்கு ஈஸ்வரன், அவள் இப்போதுதான் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். பிளஸ்-2 முடித்த பின் பார்க்கலாம் எனக்கூறி அனுப்பியுள்ளார். இந்நிலையில் மீண்டும் கடந்த 3-ம்தேதி பள்ளிக்குச் சென்ற பாரதிபிரியாவிடம், என்னுடன் வந்துவிடு, நாம் திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறியுள்ளார். இதுகுறித்து தனது தந்தையிடம் பாரதிபிரியா கூறியுள்ளார்.

 இதையடுத்து கடந்த 4-ம்தேதி சின்னதாராபுரம் போலீஸில் ஈஸ்வரன், மனோஜ் மீது புகார் செய்தார். போலீஸார் இருவரது குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவரர்த்தை நடத்தி, பின்னர் மனோஜிடம் இனி பாரதிபிரியாவை தொந்தரவு செய்யக்கூடாது என எழுதி வாங்கி அனுப்பிவிட்டனராம். இதனிடையே புதன்கிழமை காலை சைக்கிளில் பள்ளிக்கு பங்களாத்தோப்பு என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த பாரதிபிரியாவை பைக்கில் பின்னால் துரத்திச் சென்று சைக்கிள் மீது மோதியுள்ளார். இதில் நிலைகுலைந்து போய் பாரதி பிரியா கீழே விழுந்தபோது தான் வைத்திருந்த கத்தியால் அவளை உடலில் 24 இடங்களில் வெறியுடன் மாறி, மாறி குத்தியுள்ளார். பின்னர் தன்னையே குத்திக்கொண்டார்.

Advertisement

 இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே பாரதிபிரியா பரிதாபமாக இறந்தார். மனோஜ் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 இதுதொடர்பாக சின்னதாராபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

  இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலர் அன்னகாமாட்சி மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாணவர்கள் சங்கத்தினர் ஆகியோர் மனோஜ் மீது கொலை வழக்குமட்டுமின்றி கூடுதலாக வழக்குகள் பதிவு செய்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த பாரதிபிரியாவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனக்கோரி கரூர்-வெங்கமேடு சாலையில் அமர்ந்து மறியலுக்கு முயன்றனர். தகவல் அறிந்த கரூர் கோட்டாட்சியர் கார்த்திகேயன் மற்றும் நகர காவல்நிலையத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சட்டத்திற்குட்பட்டு கொலையாளிக்கு கூடுதல் தண்டனையும், பாரதிபிரியாவின் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடும் பெற்றுத்தருகிறோம் எனக்கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.