முகப்பு
தற்போதைய செய்திகள்

வறட்சி நிவாரண பணத்தை திருப்பி அனுப்பாமல் இருக்க நடவடிக்கை : ஆட்சியர் வே.ராஜாராமன்

விருதுநகர் மாவட்டத்தில் வறட்சி நிவாரண பணத்தை திருப்பி அனுப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்

பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:59 AM

விருதுநகர் மாவட்டத்தில் வறட்சி நிவாரண பணத்தை திருப்பி அனுப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்தார்.

   விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை வகித்தார். வேளாண்மை துறை இணை இயக்குநர் சுப்பையா முன்னிலை வகித்தார். இதில், அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்த விவாதம்.

   ராமசுப்பிரமணியராஜா(மா விவசாயிகள் சங்கம்): கடந்த 2012-ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளைநிலங்கள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களின் அறிக்கையின் அடிப்படையில் ரூ.16 கோடி ஒதுக்கியது. அதில், அப்போதைய காலகட்டத்தில் ரூ.4 கோடி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து, குறிப்பிட்ட நாள்களுக்கு பின் உரிய ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கிகளை அணுகிய விவசாயிகளுக்கு நிறுத்தி வைக்கும் படி கூறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, அப்பணத்தை திருப்பி அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதை நிறுத்தி வைத்து, அதை வற்ட்சி நிவாரணம் பெறாத விவசாயிகளுக்கு மீண்டும் வழங்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் இம்மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையான ரூ.5 கோடியை பெற்றுத் தருவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Advertisement

    விஜயமுருகன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): இம்மாவட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் ஆகியவைகளுக்கு  உரிய விலை கிடைக்கும் வகையில் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கடந்தமாதமே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது. தற்போது, சாகுபடி செய்யப்படும் பருவம் என்பதால் போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என்றார்.

    அம்மையப்பன்(வட்டார விவசாயிகள் சங்கம்): கிராமங்களில் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆவின் நிர்வாகம் மூலம் பால் கூட்டுறவு சங்கங்களை தொடங்க வேண்டும் என்றார்.

   இதற்கு ஆட்சியர் வே.ராஜாராமன் பதிலளித்து பேசுகையில், வறட்சி நிவாரண பணம் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவரங்கள் கேட்டு திருப்பி அனுப்பாமல் இருப்பதற்கும், அதை பெறாத விவசாயிகளுக்கு திருப்பி கொடுக்க  அரசிடம் அனுமதி பெற்ற பின்னரே முடிவு செய்யப்படும். தனியார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய பாக்கித் தொகையை பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும். இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருள்களுக்கு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.

    அதில் பருத்தியை பருத்திக் கழகம் மூலமும், மக்காச்சோளத்தை கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலமும் மற்றும் நெல்லுக்கு கொள்முதல் நிலையமும்   விரைவில் அமைக்கப்படும். ஆவின் மூலம் கிராமங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) செல்வம் உள்ளிட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.