விருதுநகரில் பல்வேறு நகை திருட்டு வழக்குகளில்தொடர்புடைய 4 பேர் கைது:16 சவரன் நகை பறிமுதல்
விருதுநகர் பகுதியில் பல்வேறு நகை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சி.ஆர்.பி.எப் போலீஸார் உள்பட 4 பேரை சனிக்கிழமை மாலையில் போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் பகுதியில் பல்வேறு நகை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சி.ஆர்.பி.எப் போலீஸார் உள்பட 4 பேரை சனிக்கிழமை மாலையில் போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் எம்.எப் சாலைப்பகுதியைச் சேர்ந்த பருப்பு வியாபாரி ராஜசேகரனின் மனைவி செல்வமணி(49). இவர் கடந்த புதன்கிழமை மண்ணெண்ணெய் வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி சென்றாராம். அங்கு வீட்டை திறவுகோலால் திறக்கையில், அந்த இடத்தில் பைக்குடன் நின்றிருந்த மர்ம நபர் 2 பேர் திடீரென செல்வமணியின் கழுத்தில் கிடந்த 6 சவரன் நகையை பறித்தனர். பின் பொதுமக்கள் திரண்டதால், விரைவில் பைக்பை திரும்பும் போது கல்லில் இடறி விழுந்தனர். அப்போது செல்வமணியிடம் பறித்த நகையையும், ஏற்கனவே அவர்கள் வைத்திருந்த நகையையும், பைக்கையும் அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.
இது தொடர்பான புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது, செல்வமணியிடம் நகையை பறித்தவர்கள் விருதுநகரில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே விருதுநகர் ஏ.டி.பி நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் போலீஸார் விரைந்து சென்றனர்.
அங்கு வீட்டிற்குள் பதுங்கியிருந்த முருகன்(30), சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(29) பிடித்து விசாரித்தனர். அதில், திருடிய நகைகளை விருதுநகர், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் விற்பனை செய்ததாகவும், இதற்கு உதவியாக நகைக்கடை நடத்தி வரும் முத்துப்பாண்டி, சுரேஷ்பாபு இருந்ததாகவும் அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் உருக்கி வைத்திருந்த 16 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மீது மதுரை, விருதுநகர் உள்ளிட்ட நகை திருட்டு வழக்குகள் உள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இதில், முருகன் என்பவர் சி.ஆர்.பி.எப் போலீஸாராக இருந்து வேலைநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். அதோடு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விருதுநகர் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 9 இருசக்கர வாகனங்களையும் தீவைத்து கொளுத்தியதில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.