விவசாய சங்க தலைவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை
திருநெல்வேலி அருகே சமூக சேவகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி குறிச்சியில் விவசாயி வியாழக்கிழமை அதிகாலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சியைச் சேர்ந்தவர் கணேசன் (55). இவர், பாளையங்கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவராகவும், குறிச்சி விவசாயிகள் சங்கத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். திருமணம் செய்யாமல் இருந்த கணேசன், சேவை பாரதி அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் ஏழை பெண்களுக்கு பொங்கல் பைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தார்.
குறிச்சி அக்ரஹாரம் கிருஷ்ணன் கோவில் தெருவில் பாளையங்கால்வாய் ஓரத்தில் உள்ள விநாயகர் கோயிலை தினமும் காலையில் சுத்தம் செய்து வழிபடுவார். அதன்படி வியாழக்கிழமை அதிகாலையில் கோயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கணேசனை, மர்ம கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பாளையங்கால்வாய்க்கு குளிக்க வந்த பொதுமக்கள், கணேசன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் அந்தப் பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். தகவலறிந்ததும் மேலப்பாளையம் போலீஸார் அங்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், துணை ஆணையர் து.பெ.சுரேஷ்குமார், பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் மாதவன்நாயர் உள்பட போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
விவசாயிகளின் பிரதிநிதி: வெட்டிக்கொலை செய்யப்பட்ட குறிச்சி கணேசன், விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்து வந்தார். பாளையங்கால்வாய் விவசாய நிலங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கு தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்ததோடு, கால்வாய் பாசன மடைகளில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுத்துவந்தார்.
தெற்குப்புறவழிச்சாலையோரம் உள்ள ஒரு நிலம் தொடர்பாக இவருக்கும், இவரது உறவினர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் குறிச்சி கணேசனை வெட்டிக் கொலை செய்தவர்கள் யார்? எதற்காக வெட்டிக் கொலை செய்தனர் என்பது உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறிச்சி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.