முல்லைப் பெரியாறு அணையில் ஜவர் துணைக்குழு திடீர் ஆய்வு : அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தயார் நிலையில் இருப்பதாக கூட்டத்தில் முடிவு
முல்லைப் பெரியாறு அணையில் சனிக்கிழமை ஐவர் கொண்ட துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது. பின்னர் மாலையில், ஆலோசனை கூட்டத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால்
முல்லைப் பெரியாறு அணையில் சனிக்கிழமை ஐவர் கொண்ட துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது. பின்னர் மாலையில், ஆலோசனை கூட்டத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கையில் தயார் நிலையில் துணைக்குழு இருப்பதாக தெரிவித்தனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவை நியமித்தது. இந்த குழுவிற்கு உதவியாக அணையின் சீப்பேஜ் நீரின் அளவை கணக்கிடுவது, அணையில் ஏற்படும் புதிய மாற்றங்கள் குறித்து மூவர் கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிப்பதற்காக, மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹாரிஷ்கிரீஷ் தலைமையில் துணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்த துணை குழுவில் தமிழகம் சார்பாக, பெரியாறு அணை செயற்பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரமும், கேரள அரசின் பிரதிநிதிகளாக பெரியாறு மைனர் இரிக்கேஷன் செயற்பொறியாளார் ஜார்ஜ் டேனியல், உதவிப்பொறியாளர் எஸ்.என். பிரசீத் ஆகியோரும் உள்ளனர்.இந்த ஐவர் கொண்டு துணைக்குழு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால், நீர்வரத்து அதிகம் இருக்கும், இந்நிலையில் சனிக்கிழமை முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் வழக்கமாக செய்யும் நீர்வரத்து, வெளியேற்றம், கசிவு நீர்(ஜீபேஸ் அளவு) அளவு போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அணையிலிருந்து கேரளாவுக்கு திறந்து விடப்படும் 13 மதகுகளில் குறிப்பிட்ட இரண்டு மதகுகளின் இயக்கம் சரிபார்க்கப்பட்டது. துணைக்குழுவின் ஆய்வு பணி மாலை நிறைவடைந்தது.
பின்னர், மாலை குமுளி 1-ம் மைல் மூவர் குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கி இருப்பதால், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்ட முடிவினை என்.ஏ.வி நாதன் தலைமையிலான தலைமை மூவர் கண்காணிப்பு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.