ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு அளிப்பது திமுக தலைவர் கருணாநிதி முடிவெடுப்பார்.அவரது முடிவின்படி நாங்கள் செயல்படுவாம் என்றார்
கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின். திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழிலபதிர் வீகேஎன். கண்ணப்பன், மாநகர திமுக செயலர் மு. அன்பழகன் ஆகியோரது இல்லத் திருமண விழாக்களை நடத்தி வைத்த பின்னர் அவர் அளித்த பேட்டி: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் மற்ற கட்சிகளின் ஆதரவை கேட்பது அவர்களது உரிமை. இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி முடிவெடுப்பார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடாமல் நாங்கள் இருந்தாலும், தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர் கொள்வதற்கு திமுக தயாராக இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்ற போது அரசில் எவ்வித பணிகளும், திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அதுபோல, தற்போது அமைச்சர்கள் அனைவரும் ஆர்.கே.நகர் தொகுதியில் முகாமிட்டுள்ளதால், எவ்வித அரசுப் பணிகளும் நடைபெறவில்லை. இது எல்லோருக்கும் தெரியும். மக்களிடம் நீங்கள்தான் கொண்டு சேர்க்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ-க்கு ஏன் மாற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளதே என்று கேட்டபோது, இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டும் உண்மைகள் புலப்படும் என்றார் ஸ்டாலின்.
முன்னதாக, நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது:
பதவியை பதவியாகக் கருதாமல் பொறுப்பாகக் கருத வேண்டும் என்பார் திமுக தலைவர் கருணாநிதி. பொறுப்புடன் வளர்ந்தால்தான் மக்கள் தொண்டாற்ற முடியும்.
திமுகவால் வளர்க்கப்பட்டவர்கள் இன்று அந்த இயக்கத்தை அழிக்க துணைப் போகிறார்கள் என்பதை எண்ணும்போது வேதனையாக உள்ளது.
வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தில் தப்பித்து விடலாம். ஆனால், மக்கள் மன்றத்திலிருந்து தப்பித்துவிட முடியாது. மக்கள் மன்றத்தை நம்பிதான் எதிர்காலமே உள்ளது என்றார் ஸ்டாலின்.
இதைத் தொடர்ந்து, உறையூர் காவல் நிலையம் அருகிலுள்ள மாநகராட்சித் தொடக்கப் பள்ளி அருகே திமுக தலைவர் மு.கருணாநிதியின் 92-வதுபிறந்த நாளையொட்டி மரக்கன்றுகளை நடும் பணியை ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்வுகளில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, க.பொன்முடி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா, திமுக இளைஞரணி துணைச் செயலர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.