முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்கக்கோரி பேரணியாகச் சென்று முதல்வரிடம் மனு அளிக்க முடிவு

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி ஜூலை 2-ம் தேதி பேரணியாகச் சென்று தமிழக முதல்வரிடம் மனு அளிக்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு மக்கள்

Updated On : 13 ஜூன், 2015 at 6:37 PM
பகிர்:

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி ஜூலை 2-ம் தேதி பேரணியாகச் சென்று தமிழக முதல்வரிடம் மனு அளிக்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.

விருதுநகர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.இது குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் செல்லப்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 25-ஆண்டுகளுக்கு முன்னதாக மாநில அளவில் 12618 ஊராட்சிகளில் 25 ஆயிரம் பேர் மக்கள் நலப்பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து 3 முறை பணிநியமனமும், 3 முறை பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளோம். அதையடுத்து எங்கள் அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரையில் 12-க்கும் மேற்பட்ட வழக்கினை நடத்தி தீர்ப்பையும் பெற்றுள்ளோம்.

Advertisement

இந்நிலையில், அரசு மீண்டும் பணி வழங்கும் என்ற எதிர்பார்த்திருந்த நிலையில், அரசு மேல்முறையீடு செய்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடையையும் பெற்றுள்ளது. இத்தடையால் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வறுமையால் உயிரிழந்துள்ளனர். இதில், 90 சதவீதம் பேர் 50 வயதை கடந்து விட்டதால் மாற்றுப்பணிக்கு செல்ல முடியாத நிலையுள்ளது. அதிலும், 70 சதவீதம் பேர் வரையில் பெண்களாக உள்ளனர்.

இதைக் கருத்திற்கொண்டு மக்கள் நலப்பணியாளர்களுக்கு புதுவாழ்வு வழங்கிட வேண்டி வரும் ஜூலை 2-ம் தேதி பேரணியாக சென்று தமிழக முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம். அதற்கு முன்னதாக வருகிற 29ம் தேதி அந்தந்த மாவட்ட  ஆட்சியர்கள் மூலமாக முதல்வருக்கு மனு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளதாக  அவர் தெரிவித்தார். அப்போது, உடன் மாநில செயலாளர் புதியவன், விருதுநகர்  மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட பொருளாளர் காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.