முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் நடத்துனரின் பணியிடை நீக்கத்தை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

அரசு பேருந்தில் பயணித்த மாணவர் ஒருவருக்கு தாற்காலிக நடத்துநர் பயணச்சீட்டு கொடுத்த காரணத்திற்காக அவரை நிர்வாகம் தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், உடனே

Updated On : 14 ஜூன், 2015 at 6:19 PM
பகிர்:

அரசு பேருந்தில் பயணித்த மாணவர் ஒருவருக்கு தாற்காலிக நடத்துநர் பயணச்சீட்டு கொடுத்த காரணத்திற்காக அவரை நிர்வாகம் தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், உடனே அதை திரும்ப பெற வலியுறுத்தியும் போக்குவரத்து தொழிலாளர்கள் சனிக்கிழமை நள்ளிரவில் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகரை அடுத்த ஆமத்தூர் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் விருதுநகர் அரசு போக்குவரத்து கழக கிளையில் தாற்காலிக நடத்துனராக பணியாற்றி வருகிறராம். இவர் சனிக்கிழமை பிற்பகலில் விருதுநகர்-சாத்தூர் நகர பேருந்தில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது, பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவரிடம் இலவச பேருந்து பயண அட்டை இல்லையாம். அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த மதுரை போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பு பயணச்சீட்டு பரிசோதகர்கள் அந்த மாணவனிடம் இலவச பயண அட்டை இல்லாத நிலையில் பயணச்சீட்டு வாங்க வலியுறுத்தியுள்ளனர். அம்மாணவனும் பயணம் சீட்டு வாங்கிக் கொண்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மாணவன் பெற்றோரிடம் நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பெற்றோர் விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் புகார் செய்ததை தொடர்ந்து, நிர்வாகம் தாற்காலிக நடத்துநர் பழனிச்சாமியை தாற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக  பணி முடிந்து நள்ளிரவில் ஒவ்வொரு பேருந்துகளாக போக்குவரத்து கிளைக்கு வரும் போது நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு தகவல் தெரியவந்துள்ளது. அதையடுத்து, ஓய்வறைகளில் இருந்த அனைவரையும் அழைத்து வந்து நடத்துநரின் தாற்காலிக பணிநீக்கத்தை கண்டித்தும், அதை உடனே திரும்ப பெறக்கோரியும், இல்லாவிட்டால் பேருந்துகளை இயக்கமாட்டோம் என நள்ளிரவில் முற்றுகையிடும் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

Advertisement

இது தொடர்பாக தகவல் அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் பாண்டியன் நகர் காவல் நிலைய போலீஸார் ஆகியோர் வந்து போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நடத்துநர் பழனிச்சாமி பணிக்கு வரலாம் என சமரசம் செய்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டம் முக்கால் மணிநேரம் நீடித்ததால் போக்குவரத்து பணிமனையில் இருந்து நள்ளிரவுக்கு பின் தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.