முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சுழி அருகே கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி: மகளிர் குழுவினர் ஆட்சியரிடம் புகார்

திருச்சுழி அருகே கிராமத்தில் குழுக்கடனை திருப்பிச் செலுத்தாமல் தனிநபர்கள் 2 பேர் மோசடி செய்ததாக மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் செய்தனர்.

Updated On : 15 ஜூன், 2015 at 7:58 PM
பகிர்:

திருச்சுழி அருகே கிராமத்தில் குழுக்கடனை திருப்பிச் செலுத்தாமல் தனிநபர்கள் 2 பேர் மோசடி செய்ததாக மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே குச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழுக்கள் சார்பில் தலைவி வெ.சித்ரா ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி, தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சுந்தரம் ஆகியோர் அணுகி அமுதசுரபி மகளிர் மன்றம் தொடங்கும் படி கூறினர்.  அதன் அடிப்படையில் கடந்தாண்டு சித்ரா, இருவக்காள், வீருத்தாய், ஈஸ்வரி, பேச்சியம்மாள் மற்றும் கணபதி ஆகியோர் தலைவிகளாக கொண்டு 6 மன்றங்கள் தொடங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2 பேரும் கடன் பெற்றுத் தருவதாக கூறி குடும்ப அட்டை கார்டு, மகளிர் பதிவேடு விவரங்களையும் அளித்து வங்கியில் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தலா 11 ஆயிரம் கடன் பெற்று தந்தனர். இதையடுத்து, கடன் தொகையை மாதந்தோறும் கூட்டம் நடத்தி உறுப்பினர்களிடம் இருந்து வசூலித்து வங்கியில் செலுத்துவதற்காக மேற்குறிப்பிட்ட இருவரிடமும் வழங்கினோம்.

Advertisement

இந்நிலையில், லட்சுமி வீட்டிற்கு கடந்த 11-ம் தேதி சென்று கணக்கு விவரங்களை அறிந்து கொள்ள பதிவேடுகளை கேட்டோம். அதற்கு லட்சுமியும் அவரது மகன்களும் மேற்படி கணக்கு அனைத்தும் முடிக்கப்பட்டதாகவும், தேவையான விவரங்களை சுந்தரத்திடம் கேட்கும் படி கூறியுள்ளார். எனவே மீண்டும் தகவல்களை கேட்டு வந்தால் பொய் வழக்கு போடுவேன் என லட்சுமியின் மகன்கள் மிரட்டியுள்ளனர்.

இதற்கிடையே திருச்சுழி வங்கி கிளை மேலாளரிடம் கேட்டபோது கடன் தொகை செலுத்தப்படாமல் இருக்கிற விவரம் தெரியவந்தது. பின் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சுந்தரத்திடம் கேட்டதற்கு, பாதி தொகையை நான் தந்து விடுகிறேன் என்றார். மேலும், எங்கள் கடன் தொகையை செலுத்தவில்லை என்றபோது லட்சுமிதான் காரணம் என கூறினாராம். அதனால், எங்கள் பணத்தை திட்டமிட்டே மோசடி செய்த சுந்தரம், லட்சுமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.