விருதுநகரில் முதல்வர் காப்பீட்டு திட்ட அலுவலகம் பூட்டியிருந்ததால் பொதுமக்கள் முற்றுகை
விருதுநகரில் முதல்வர் காப்பீட்டு திட்ட அலுவலகம் பூட்டப்பட்டிருந்த காரணத்தால் அடையாள அட்டை வாங்க வந்த பொதுமக்கள் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் முதல்வர் காப்பீட்டு திட்ட அலுவலகம் பூட்டப்பட்டிருந்த காரணத்தால் அடையாள அட்டை வாங்க வந்த பொதுமக்கள் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதல்வர் காப்பீட்டு திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல் மற்றும் புகைப்படம் எடுக்காதவர்களுக்கு கணிப்பொறி மூலம் எடுப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால், இங்கு ஒவ்வொரு நாளும் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கு குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறும் நோக்கத்தில் அடையாள அட்டை பெற்று செல்வதற்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதேபோல், புதன்கிழமை காலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிதாக புகைபடம் எடுக்கவும், அட்டைகள் பெறவும் 40-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
ஆனால், அந்த அலுவலகத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாமல் பூட்டியே கிடந்துள்ளது. இதனால் பிற்பகல் 12 மணி வரையில் காத்திருந்தும் பணியாளர் வராத காரணத்தால் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அதையடுத்து, அதிகாரிகள் உடனே பணியாளரை வரவழைத்தனர். அதைத் தொடர்ந்து புகைப்படம் எடுத்தல், அடையாள அட்டை வழங்குதல் ஆகிய பணிகள் நடைபெற்றது.
Advertisement
இது தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பணியாளர்கள் அவ்வப்போது விடுமுறையில் சென்று விடுகின்றனர். அதேபோல், புதன்கிழமையும் பணியாளர் விடுமுறையில் சென்றதால் மாற்று அலுவலர்கள் இல்லாததால் அலுவலகம் பூட்டியிருந்தது. எனவே இனி வருங்காலங்களில் முதல்வர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை இல்லையென்றாலும் மருத்துவமனைகளில் சேர்த்து, பின்னர் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.