முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி விழாவில் பங்கேற்காத முதல்வர் ரங்கசாமிக்கு திமுக கண்டனம்

தில்லியில் பிரதமர் மோடி விழாவில் பங்கேற்காத முதல்வர் ரங்கசாமிக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:50 AM
பகிர்:

தில்லியில் பிரதமர் மோடி விழாவில் பங்கேற்காத முதல்வர் ரங்கசாமிக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதுவை தெற்கு மாநில பொறுப்பாளர் இரா.சிவா வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு மிக முக்கியமான 3 திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது. இதற்கான விழா தில்லியில் பிரதமர் மோடி  தலைமையில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க புதுவை முதல்வருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

அதோடு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு போன் மூலம் பேசி விழாவுக்கு அழைத்துள்ளார். இதன்மூலம் இந்த நிகழ்ச்சியின்  முக்கியத்துவம் தெரிய வருகிறது. இது மட்டுமின்றி மத்திய உள்துறை  அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புதுவை மாநிலத்திற்கு மத்திய அரசின்  ஆதரவும், சுமூகமான அணுகுமுறையும் தேவை. இத்தகைய விழாக்களில் பங்கேற்பதன் மூலம்தான் மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களின் நம்பிக்கையை பெற  முடியும். 

இந்த முத்தான வாய்ப்பை நமது முதல்அமைச்சர் ரங்கசாமி  தவறவிட்டுள்ளார். அவர் விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு காலதாமதமாக செல்வதை  வாடிக்கையாக கொண்டவர்தான். ஆனால் புதுவை மக்களுக்கு பயன்  கிடைக்கக்கூடிய விழாவுக்கும் காலதாமதமாக சென்று விமானத்தை தவறவிடுவார்  என்று யாருமே நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.

இதன்மூலம் புதுவை மாநிலத்தின் மீதும், மக்களின் மீதும் ரங்கசாமி எத்தகைய அதீத அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிப்பட்டுள்ளது.

பிரதமர் விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றிருந்தால் மாநிலத்தின் கடன் தள்ளுபடி, மாநில அந்தஸ்து, கூடுதல் நிதி ஆகியவற்றை கேட்டுப் பெற்றிருக்க முடியும். அதுமட்டுமில்லாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை இடம்பெற்றுள்ளதா இல்லையா என்ற சர்ச்சைக்கு இடமில்லாமல் போயிருக்கும். இவையனைத்தையும் ரங்கசாமி தன் காலதாமதத்தினால் தவற விட்டுள்ளார்.

வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடல் நகர புனரமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி எனச் சொல்லப்படுகிற நகரங்கள் நவீனமயமாக்கல், மற்றும் அனைவருக்கும்  வீட்டு வசதித்திட்டம் ஆகிய மத்திய அரசுத்திட்டங்களின் பிரதமர் தலைமையில் நடைபெற்றுள்ளது . இதில் புதுவை மாநில முதல்வர் கலந்து கொள்ளாதது மிகவும் வருந்தத்தக்கதும் , கண்டிக்கத்தக்கதும் பொறுப்பற்றதும் ஆகும்.

புதுவை மக்களின் மனதெல்லாம் ஸ்மார்ட் சிட்டி வாய்ப்பு பறிபோய்விடப்போகிறதே என்ற பதட்டமும் பரபரப்பும் பரவிக்கிடந்ததை அனைவரும் அறிவார்கள். இன்னமும் புதுச்சேரி முதல் பட்டியலில் இல்லை. இரண்டாவது பட்டியலில் வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் உள்ளது என்ற குழப்ப நிலை உள்ளது. பிரான்சு அரசாங்கம் விருப்பத்துடன் உதவமுன்வந்தபோதும் அதைப்பயன்படுத்திக் கொள்ளாத பொறுப்பற்றநிலைஉள்ளது

பிரதமரின் அருகில் அமரவும்,மாநில அந்தஸ்து , கடன்தள்ளுபடி போன்ற விஷயங்களைப் பற்றிக் கூட பேசக்கிடைத்த வாய்ப்புகளைக்கூட தனது வழக்கமான காலதாமதம், ஆர்வமின்மை, அலட்சியம் என்ற செயல்களால் இழந்துவிட்டிருப்பதாகத்தெரிகிறது.

புதிதாக மேலும் மூன்று மருத்துவக்கல்லூரிகளுக்கும் நிகர்நிலை அந்தஸ்துவழங்க துணைபோக  முடிவெடுத்துள்ளது தெரிகிறது. இது எந்தவகையில் நியாயம் என்பதை முதல்வர் தான் சொல்ல வேண்டும். துணைநிலை ஆளுநர் இந்த பரிந்துரையை ஏற்கக்கூடாது என்றார் சிவக்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.