பழனியில் அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் தேரோட்டம்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் முகூர்த்தக்கால் நடுதல், கம்பம்சாட்டுதல் என
பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மாசித்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் முகூர்த்தக்கால் நடுதல், கம்பம்சாட்டுதல் என துவங்கியது. பிப்ரவரி மாதம் 24ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழா நாட்களில் அருள்மிகு மாரியம்மன் சிம்மவாகனம், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம், தங்கமயில் போன்ற பல்வேறு வாகனங்களில் வீதிஉலா எழுந்தருளினார். விழாவை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு மஞ்சள்நீர், பால் ஊற்றி வழிபட்டும், தீச்சட்டி, சூடச்சட்டி எடுத்தும் வழிபாடுகள் மேற்கொண்டனர். இந்த வருடம் கேரள மாநிலம் வயநாடு, பாலக்காடு, கொல்லம், கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் வெளிமாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து தீச்சட்டி எடுத்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு அருள்மிகு மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசித்தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. காலை 9 மணிக்கு பாதிரிப்பிள்ளையார் கோயிலுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தலும், மதியம் 2 மணிக்கு திருக்கண் நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றது. மாலை 5 மணியளவில் அம்மன் தேரில் ஏற்றம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தேரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் இழுக்க, பின்னே கோயில் யானை கஸ்தூரி தள்ள தேர் நான்கு ரத வீதிகளில் ஆடி அசைந்து வந்ததை பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். தேர் நிலையை அடைந்தவுடன் கைதட்டி கரகோஷம் எழுப்பினர். இரவு அம்மன் வண்டிக்கால் பார்த்தல், வாணவேடிக்கை ஆகியன நடைபெற்றது. நள்ளிரவு திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நடைபெற்றது. இன்று(வியாழக்கிழமை) இரவு திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு மன்றத்தினர் அலங்கார ரதம் ஏற்பாடு செய்திருந்தனர். பக்தர்கள் பலரும் பல்வேறு மாறுவேடங்கள் புனைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேரோட்ட நிகழ்ச்சியில் பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமார், நெய்க்காரபட்டி பேரூராட்சி தலைவர் விஜயசேகரன், பாலசமுத்திரம் பேரூராட்சி துணைத் தலைவர் சக்திவேல், அரசு வழக்கறிஞர் பாஸ்கரன், காணியாளர் நரேந்திரன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் திருக்கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.