பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அன்னதானம்
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. விழாவை முன்னிட்டு பழனி வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் 40ம் ஆண்டு நிகழ்ச்சியாக பூச்சொறிதல் ரத ஊர்வலம், அலங்கார ரத ஊர்வலம் ஆகியன நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை முக்கிய நிகழ்ச்சியாக அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அன்னதானம் நடத்தப்பட்டது.
அருள்மிகு அன்னபூரணி அம்மனுக்கு பழனி சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், திருவண்ணாமலை சுரேஷ்குமார சுவாமிகள் ஆகியோர் தீபாராதனை நடத்தினர். பழனி கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் இயக்குனர் ஹரிஹரமுத்து, நெல்லை வணிகவரித்துறை இணை ஆணையர் தேவேந்திரபூபதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். அன்னதானத்தில் சுமார் ஐந்தாயிரம் பேர் பங்கேற்றனர். அனைவருக்கும் வடை, பாயாசத்துடன் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை வருத்தமில்லா வாலிபர் சங்க தலைவர் மூர்த்தி, நிர்வாக தலைவர் ரத்தினம், செயலாளர் செல்வராஜ், ஆலோசகர் தேரடிபாலு, பொருளாளர் மதனம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். வரும் மார்ச்.14ம் தேதி திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.