மனைவியைக் குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள்சிறை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
பாளையங்கோட்டையில் பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள்தண்டனை
பாளையங்கோட்டையில் பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள சுபம் காலனியைச் சேர்ந்த நல்லபெருமாள் மகன் ரவி (46). இவரது மனைவி லதா (42). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 8-8-2013 அன்று ஏற்பட்ட தகராறில் ரவி கத்தியால் லதாவை குத்திக் கொலை செய்தார். பின்னர் அதனை மறைக்க உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டு மனைவி தற்கொலை செய்ததாக கூறினார்.
பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில் ரவி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நசீர்அகமது, குற்றஞ்சாட்டப்பட்ட ரவிக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.