நெல்லையில் 304 அஞ்சலகங்களில் வேலை நிறுத்தம்
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை தொடங்கிய....
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்த்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கான தபால் பட்டுவாடா, மணியார்டர், சேமிப்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கின.
தலைமை தபால் நிலையங்களில் கடிதங்கள் பிரிக்கும் பணியும் பாதிக்கப்பட்டு கடிதங்கள் அனைத்தும் மலைபோல தேங்கிக் கிடக்கின்றன. கிராமிய அஞ்சல் ஊழியர்களை இலாகா ஊழியராக அறிவிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள தபால் ஊழியர்களுக்கு உள்ள அனைத்து சலுகைகளையும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
கிராமிய அஞ்சல் ஊழியர்களின் ஊதிய மாற்றம் மற்றும் பணித்தன்மையை மாற்றியமைப்பது தொடர்பாக நீதிபதி தலைமையில் தனி கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும். அஞ்சல்துறையை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போரட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 304 அஞ்சலகங்களில் பணிபுரியும் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.