வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து புதன்கிழமை காலை முதல் மணல் லாரிகள் வழக்கம்போல் இயங்கும்.
தமிழக அரசால் நடத்தப்படும் அனைத்து மணல் குவாரிகளிலும் 2 யூனிட்டுக்கு ரூ.1,000, 3 யூனிட்டுக்கு ரூ.1,500 வீதம் வங்கி வரைவோலை பெற்றுக்கொண்டு மணல் வழங்கக்கோரி திருச்சி மண்டலத்தில் மணல் லாரிகளை இயக்காமல் மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து, கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கிவரும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் பங்கேற்றன. மேலும் நிர்ணயித்த அளவை விட அதிகமாக மணல் ஏற்றி்ச்சென்ற லாரிகளை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, 2ஆம் மணல் விற்பனை மைய ஒப்பந்ததாரர்கள் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நாமக்கல்லில் நடைபெற்றது. இதன்பிறகு வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி அறிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 2ஆம் விற்பனை மையங்களில் சிறிய லாரிகளுக்கு 2 யூனிட், பெரிய லாரிகளுக்கு 3 யூனிட் மணல் மட்டுமே ஏற்றிவிடப்படும். ஓட்டுநர்கள் கேட்கும் ஊருக்கு மணல் எடுத்துச்செல்ல உரிமம் வழங்கப்படும் எனவும், இரண்டாம் விற்பனை மையங்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் செயல்படும் எனவும் ஒப்பந்ததாரர்கள் உறுதியளித்தனர். அதன் பேரில் போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. புதன்கிழமை காலை முதல் மணல் லாரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றார்.
ஒரே நாளில் தீர்வு கிடைத்துவிடுமா? கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்ல.ராசாமணி, மணல் குவாரிகளில் 2ஆம் விற்பனை என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. 2ஆம் விற்பனையால் கடந்த 18 மாதங்களில் ரூ.1,442 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. மேலும் மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். போராட்டத்தின் அடுத்தகட்டமாக குவாரிகளில் நேரடியாக மணல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வங்கி வரைவோலை, லாரிகளுடன் பொதுப்பணித்துறை அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம், கூடுதல் அளவு மணல் ஏற்றிவரும் லாரிகளை பிடித்து, போலீஸ் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டமும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
முறைகேடு புகார், போராட்ட அறிவிப்பு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து அவரிடம் கேட்டபோது, கோரிக்கைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்த்துக்கொள்ள முடியாது. முதல்கட்டமாக சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். பொதுமக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விலையிலேயே மணல் வழங்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.