முகப்பு
தற்போதைய செய்திகள்

அனைத்து இனங்களுக்கும் ஏற்றப்பட்ட கட்டணங்களை குறைக்கக் கோரி கவுன்சிலர்கள் தர்ணா

பழனியில் நகராட்சியில் ஏற்பட்ட அனைத்து இனங்களுக்கும் கட்டணங்களை குறைக்கக் கோரி புதன்கிழமை கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:58 AM
பகிர்:

பழனியில் நகராட்சியில் ஏற்பட்ட அனைத்து இனங்களுக்கும் கட்டணங்களை குறைக்கக் கோரி புதன்கிழமை கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பழனி நகராட்சி மூலம் கட்டணக்கழிப்பிடங்கள், சுற்றுலா வாகன நுழைவாயில், மார்க்கெட் நுழைவாயில் உள்ளிட்ட ஏராளமான இனங்கள் ஏலம் விடப்பட்டு நகராட்சிக்கு வருவாய் ஈட்டப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அனைத்து இனங்களுக்கும் மன்ற கூட்டத்தில் பொருள் வைக்கப்பட்டு கட்டணங்கள் உயர்த்தி வழங்கப்பட்டது.  இதன் பின் நடைபெற்ற ஏலத்தில் நகராட்சி சுற்றுலா வாகன நுழைவுக்கட்டணம்  வசூல் செய்யும் இனம் சுமார் மூன்றேகால் கோடிக்கு ஏலம் போனது. 

இந்நிலையில் பக்தர்கள் நலன்கருதி சுற்றுலா வாகனத்துக்கு மட்டும் உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றி பின்னர் ஏலம் விடுமாறு மாவட்ட ஆட்சியர் விடுத்த உத்திரவின் பேரில் கடந்த சிலதினம் முன்பு கூட்டம் நடைபெற இருந்தது.  ஆனால் அது ரத்து செய்யப்பட்டு புன்கிழமை மீண்டும் கூட்டம் நடைபெற்றது.  திமுகவை சேர்ந்த நகர்மன்ற தலைவர் வேலுமணி கூட்டத்துக்கு தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்ரனர்.  கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் திமுக கவுன்சிலர்கள் முஜிபுதீன், ஷாகுல்ஹமீது, முருகபாண்டியன், செபாஸ்டின் ஆகியோர் சுற்றுலா வாகன நுழைவுகட்டண உயர்வு மட்டும் பக்தர்களை பாதிக்கும் எனும் நிலையில் கிரிவீதி, அடிவாரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ள கழிப்பறை, குளியல்கட்டண உயர்வு பக்தர்களை பாதிக்காதா என கூறி மன்ற கூட்டத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட ஒன்பது இனங்களுக்கும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். 

அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கவுன்சிலர் சுந்தர், கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கந்தசாமி ஆகியோரும் தலைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  மாவட்ட ஆட்சியரிடம் இருந்த வந்த அறிவுறுத்தல் கடிதத்தை காட்ட கேட்டபோது யாரும் காட்டவில்லை. கவுன்சிலர் கந்தசாமி கூறும்போது, பக்தர்களுக்கு ஒரு இனத்தின் கட்டண உயர்வு மட்டும் பாதிக்கும் போது மற்ற இனங்களின் கட்டண உயர்வு பாதிக்காது என கூறுவதை எப்படி ஏற்பது? குளிக்க ரூ.15 என உயர்த்தி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுஎப்படி பக்தர்களை பாதிக்காதா, நகராட்சி வளாகத்தில் ஏராளமான சிறுவியாபாரிகள் கடைகளுக்கு நாள்வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.  ஆனால் பிரமாண்டமான வணிக வளாகங்களுக்கு குறைந்த கட்டணம் வரி வசூலிப்பாக நடைமுறையில் உள்ளது.  இதுபோன்ற ஏராளமான முறைகேடுகள் நகராட்சியில் உள்ளது. இதை கண்டித்தே நாங்கள் தர்ணா செய்துள்ளோம் என்றார்.  எனினும் கூட்டத்தில் உள்ள 33 கவுன்சிலர்கள் அதிகமானோர் ஒரு இனத்துக்கு மட்டும் விலை குறைப்புக்கு ஆமோதித்த நிலையில் அதை தலைவர் நிறைவேற்றிவிட்டு பிற பொருள்களையும் அங்கீகரித்து விட்டு சுமார் நாற்பது நிமிடங்களில் கூட்டத்தை முடித்து விட்டு வெளியேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.