முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி சிவகிரிப்பட்டி தட்டான்குளத்தில் மர்மமான முறையில் செத்து மிதந்த மீன்கள்

பழனி தட்டான்குளத்தில் லட்சக்கணக்கான முறையில் மர்மமான முறையில் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:58 AM
பகிர்:

பழனி தட்டான்குளத்தில் லட்சக்கணக்கான முறையில் மர்மமான முறையில் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பழனியை சுற்றிலும் 15க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவை அணைகள் மூலமாகவும், மழைகளாலும் அவ்வப்போது நிரம்பி வருகிறது.   சமீபத்தில் பெய்த மழையால் பழனியை சுற்றியிருந்த அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பியது.  இதையடுத்து குளங்களில் மீன்பாசிக்கு ஏலங்கள் விடப்பட்டது.  இதில் சுமார் நாற்பது ஏக்கர் பரப்பளவுள்ள பழனி சிவகிரிப்பட்டியில் உள்ள தட்டான்குளமும் ஏலம் விடப்பட்டது.  பலத்த போட்டிக்கு இடையே புதுஆயக்குடி, ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த மாரிமுத்து(55) என்பவர் பங்குதாரர்களை சேர்த்து ஏலமெடுத்தார். 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இதில் சுமார் இரண்டு இலட்சம் மீன்குஞ்சுகள் வளர்த்தும் பொருட்டு விடப்பட்டது. இந்நிலையில் இந்த குளத்தில் கடந்த இரு தினங்களாக பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கத் துவங்கியது.  புதன்கிழமையும் அதிக எண்ணிக்கையில் மீன்கள் செத்து மிதக்கத் துவங்கியது.  இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் குளப்பகுதியில் குளிக்கவோ, ஆடு,மாடுகளை மேய்த்து தண்ணீர் குடிக்க விடவோ அச்சப்பட்டு ஒதுங்கினர்.  இதுகுறித்து கேள்விப்பட்ட மீன் ஒப்பந்தகாரர் மாரிமுத்து சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது சுமார் ஒரு இலட்சம் மீன்கள் இறந்தது தெரியவந்தது.  இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பலத்த போட்டியில் இந்த குளத்தை ஏலம் எடுத்து வெள்ளிக்கெண்டை, சாதா கெண்டை, ரோகு, கட்லா, மிருகால், ஜிலேபி என சுமார் இரண்டு இலட்சம் மீன்குஞ்சுகள் விட்டேன்.  

தற்போது சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மீன்கள் இறந்துவிட்டது.  சில மீன்கள் சராசரியாக ஒரு கிலோ எடைக்கு மேல் உள்ளது.  மூன்று இலட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து பழனி டவுன் காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளேன். இழப்பீட்டுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.  மீன் இறப்பு குறித்து சம்பவ இடத்துக்கு வந்த மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் சாந்தி, தண்ணீரின் மாதிரி எடுத்து கிண்டிக்கு அனுப்புவதாகவும், அதன் பின்னரே மீன் இறப்புக்கான காரணம் என்ன என்று தெரியும் என தெரிவித்தார்.  குளத்தில் பல்வேறு இடங்கள் ஆழமாக இருந்தாலும் தற்போது சுமார் இரண்டரை அடி ஆழமே தண்ணீர் இருப்பதால் வெயிலால் மீன்கள் இறந்ததா அல்லது தொழில்போட்டி காரணமாக வேறுயாரும் விஷம் வைத்து தண்ணீர் கெட்டுப்போய் மீன்கள் இறந்ததா என்பது ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்ற நிலையில் பொதுமக்கள் குளத்துக்கு போவதை தவிர்ப்பது நல்லது என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.