காரியாபட்டி அருகே அரசு பஸ் பைக் மீது மோதல் ஒருவர் சாவு: 11 பேர் படுகாயம்
காரியாபட்டி அருகே அரசு விரைவு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்ததில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூரிலிருந்து-தூத்துக்குடி நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்பேருந்து காரியாபட்டி அருகே மீனாட்சிபுரம் 4 வழிச்சாலையில் செல்லும் போது, எதிரே வந்த பாரைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் இருசக்கர வாகனம் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்ததில், அதில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப், காசியம்மாள், மாரியம்மாள், முத்துமாரி, கண்ணன், அருள்முருகன், அனுசுயா, கனிமாலா உள்ளிட்ட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவறிந்த ஆவியூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
இது தொடர்பாக ஆவியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து அரசு விரைவு பேருந்தின் ஓட்டுநர் ராமராஜை கைது செய்து விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.