பழனியில் சாலை விரிவாக்கத்துக்கு 135க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றம்
பழனி நகரில் சுமார் ஒன்றரை கி.மீ., தூரம் சாலை விரிவாக்கத்துக்காக 135க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருவதால் மாற்று ஏற்பாடுகள் செய்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை
பழனி நகரில் சுமார் ஒன்றரை கி.மீ., தூரம் சாலை விரிவாக்கத்துக்காக 135க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருவதால் மாற்று ஏற்பாடுகள் செய்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயில்நகரான பழனி திண்டுக்கல் சாலையில் நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் சுமார் ஐம்பது வருடங்களை தாண்டியவையாகும். பழனிக்கு வரும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும், வெயிலில் வாடி வருவோர்க்கும் மட்டுமன்றி ஆயிரக்கணக்கான பறவைகளின் வாழிடங்களாகவும் இவை விளங்குகிறது. இந்நிலையில் பழனி-திண்டுக்கல் சாலையில் சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை முதல் பழனி புதுதாராபுரம் ரோடு வாப்சன்ஸ் துணிக்கடை வரையிலுமான சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தை சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கம் செய்யத் துவங்கியுள்ளது. இதற்காக இந்த சாலையில் உள்ள சுமார் 135 மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. இது காண்போரை மிகவும் வருத்தப்பட செய்து வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் ஐநூறு மரங்களை நடுவதாக சமாதானம் தெரிவித்தாலும் அது நடைமுறைக்கு சாத்தியமா என்பது கேள்விக்குறியே. மேற்குறிப்பிடுள்ள சாலை முதலிலேயே அகலமானதுதான். இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே அதிக அளவு இடம் கிடைத்து விடும். அவற்றை பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அனுமதித்து தற்போதுள்ள சாலையில் சென்டர் மீடியன்கள் அமைத்தால் போகும் வாகனங்கள் ஒரு வழியிலும், வரும் வாகனங்கள் ஒரு வழியிலும் அனுமதித்தால் போக்குவரத்து சீராகும். அதை விடுத்து சாலையின் இருபுறமும் அடர்ந்து நிற்கும் மரங்களை வெட்டுவதால் நன்மையாகாது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதுள்ள கோடைகாலத்தில் பங்குனி உத்திரத்துக்கு வரும் பக்தர்களுக்கு இந்த மரங்கள் பெரும் பயனாக இருந்த நிலையில் மரங்கள் வெட்டுவதை தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.