அதிகவட்டி தருவதாக கூறி பல இலட்சம் ஏமாற்றிய தம்பதி
பழனி அருகே அதிக வட்டி தருவதாக கூறி நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றிய தம்பதியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண்கள் வெள்ளிக்கிழமை ஆயக்குடி காவல் நிலையத்தில் குவிந்தனர்.
பழனி அருகே அதிக வட்டி தருவதாக கூறி நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றிய தம்பதியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண்கள் வெள்ளிக்கிழமை ஆயக்குடி காவல் நிலையத்தில் குவிந்தனர்.
பழனியை அடுத்த பழைய ஆயக்குடி 18வது வார்டு அண்ணாநகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சூர்யாதேவி. இவர்கள் இருவரும் அப்பகுதியை சேர்ந்த பெண்களிடம் தங்களுக்கு தெரிந்த நபர்களிடம் வைப்புத் தொகைக்கு அதிக வட்டிக்கு பெற்றுத்தருவதாக கூறியுள்ளனர்.
அதை நம்பி நூற்றுக்கணக்கான பெண்கள் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் தினமும் கூலிவேலைக்கு செல்லும் பெண்கள் ஆவர். இதில் மகளிர் சுயஉதவிக்குழுக்களும் அடக்கம். மாதம் ரூபாய் இருநூறு வீதம் மூன்று வருடம் கட்டினால் மூன்றுவருட முடிவில் பலஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையை நம்பி அப்பகுதியினர் தாங்கள் மட்டுமன்றி தெரிந்தவர்களிடம் சொல்லி பணம் வாங்கி தந்துள்ளனர்.
மூன்று வருடம் முடிந்த நிலையில் பணம் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டபோது முருகேசன்-சூர்யாதேவி தம்பதி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சிலதினம் முன்பு இருவரும் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனராம். மேலும், இவர்கள் பழனி அடிவாரம் பகுதியில் இருப்பதாக பணம் கொடுத்தவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை அவர்களை பிடித்து தங்கள் பணத்தை மீட்டுத்தருமாறு சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஆயக்குடி காவல் நிலையத்தில் குவிந்து புகார்களை கொடுத்தனர். பெண்கள் தவிர ஆண்களும் கடன் கொடுத்து ஏமாந்துள்ளனர். மொத்த தொகை சுமார் இருபத்தைந்து இலட்சம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.