முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீநடராஜர் கோயில் சிறப்பு தரிசனம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு தரிசனம் நிகழ்ச்சி   ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.50 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும்,

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:18 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு தரிசனம் நிகழ்ச்சி   ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.50 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி தரிசன காட்சியளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'நடராஜா', 'சிவசிவா' என கோஷமிட்டு தரிசனத்தை கண்டுகளித்தனர்.

ஸ்ரீநடராஜர் கோயிலில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஏப்.25 தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. மே.1-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை கும்பாபிஷேகமும், அதே நேரத்தில் ராஜசபை மற்றும் நான்குராஜகோபுரங்களுக்கும் மகாகும்பாபிஷகம் நடைபெற்றது. இரவு தெருவடைச்சான் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. மே.2-ம் தேதி சனிக்கிழமை சிறப்பு தேரோட்டமும், இரவு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனையும் நடைபெற்றது.

மே 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் ஸ்ரீநடராஜமூர்த்திக்கும்,

ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகமும், சொர்ணாபிஷேகமும் (தங்கக் காசுகளால் அபிஷேகம்) நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம்,இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடகுடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்கக்காசுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீநடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண  அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெற்றன. சித்சபையில் உத்சவ ஆச்சாரியாரால் ரகசிஸ பூஜை நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த

பின்னர் பிற்பகல் 1.50 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி தரிசன காட்சியளித்தனர். பின்னர் சித்சபா பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். மே 4-ம் தேதி திங்கள்கிழமை இரவு பல்லக்கு வீதிஉலா நிகழ்ச்சியும் விழா முடிவடைகிறது.

உத்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஐ.சர்வேஸ்வர தீட்சிதர், கும்பாபிஷேக கட்டளை தீட்சிதர் டி.எம்.தியாகப்பா தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். சிதம்பரம் டிஎஸ்பி சுந்தரவடிவேலு தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.  குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர், ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் ஆகியோர் செய்தனர். போலீஸாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அன்னதானம்: கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கிழக்கு கோபுர வாயிலில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் ஏ.யாகமூர்த்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் பி.சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் திருநாவுக்கரசு, வி.சங்கர், கே.கணேசன், என்.ராஜா, பி.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.