உலகப்போர் நினைவு தினம் : காரைக்காலில் போர் நினைவுத் தூணுக்கு பிரெஞ்சு மக்கள் அஞ்சலி
இரண்டாவது உலகப் போர் நினைவு தினத்தையொட்டி காரைக்காலில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவுத் தூணுக்கு பிரெஞ்சுக்காரர்கள் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
இரண்டாவது உலகப் போர் நினைவு தினத்தையொட்டி காரைக்காலில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவுத் தூணுக்கு பிரெஞ்சுக்காரர்கள் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
இரண்டாம் உலகப்போர் 70-வது நினைவு தினம் காரைக்காலில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள பிரெஞ்சு போர் வீரர் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தெய்தா வீதியில் உள்ள பிரெஞ்சுப் பள்ளியிலிருந்து பிரெஞ்சு குடியுரிமைதாரர்கள் மலர் வளையத்துடன் ஊர்வலமாக நினைவுத் தூண் பகுதிக்கு வந்தனர்.
சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.பி.பழனிவேல் கலந்துகொண்டார். நினைவுத் தூண் பகுதியில் உள்ள தனித்தனி கம்பங்களில் இந்திய தேசியக் கொடி, பிரெஞ்சு தேசியக் கொடி ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டது.
இருநாட்டின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. ஓய்வுபெற்ற பிரெஞ்சு ராணுவ வீரர்கள் சங்கத் தலைவர் முத்துதெய்வராயன், அப்சி சங்கத் தலைவர் வளவன் அசோகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றவர்களும், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பிரெஞ்சு குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.