காரைக்காலில் மலர் கண்காட்சி நடத்தப்படுமென புதுச்சேரி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலம் தவறிய அறிவிப்பால் நிகழாண்டு நடத்துவதற்கு வாய்ப்பு குறைவென்றே வேளாண் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. தோட்டக்கலை ஆர்வலர்களை இது வேதனைப்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வேளாண் வேளாண் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காரைக்காலில் மலர் கண்காட்சி பிப்ரவரி 2-வது வாரத்தில் நடத்தப்படுவது வழக்கம். 3 நாள் கண்காட்சியில் லட்சக்கணக்கான மலர் செடிகள் விற்பனையாகும். 2011-12-ம் ஆண்டு காரைக்காலில் கண்காட்சி நடத்தப்பட்டதே தவிர, அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் கண்காட்சி நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் புதுச்சேரியில் அண்மையில் நடந்துமுடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்,காரைக்காலில் நிகழாண்டு மலர் கண்காட்சி நடத்தப்படுமென்ற அறிவிப்பு செய்யப்பட்டது. இது தோட்டக் கலை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகம், ஆந்திரம், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வகை வகையான மலர் செடிகள் துறை சார்பில் கொண்டுவரப்படும்போது, பொதுமக்கள் எளிதில் வாங்கி வீட்டில் வளர்த்துவருவர். இந்த நிலையில், புதுச்சேரி அரசு இப்போதுதான அறிவிப்பு செய்துள்ளது. இது கோடைக் காலமென்பதால், காரைக்கால் தட்பவெப்ப சூழலுக்கு கண்காட்சி நடத்துவது உகந்ததாக இருக்காது என வேளாண் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இது தோட்டக் கலை ஆர்வலர்களை வேதனைப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் க.மதியழகன் செவ்வாய்க்கிழமை கூறும்போது, பொதுவாக மலர் கண்காட்சி ஜனவரி, பிóப்ரவரி மாதத்தில் நடத்துவதே காரைக்கால் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்றது. இப்போது கோடைக் காலமென்பதால், செடிகள் பாதித்துவிடும். நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடத்தலாம். அது மழைக் காலமாக இருக்கவும் வாய்ப்புண்டு. மலர் கண்காட்சி நடத்தப்படுவது குறித்த வேளாண் துறையின் இயக்குநரை சந்தித்து பேசவுள்ளோம். துறையின் தலைவர் தரும் ஆலோசனைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதுச்சேரி அரசு இப்போது அறிவிப்பு செய்ததை, கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் செய்திருந்தால், நிகழாண்டு தொடக்கத்திலேயே மலர் கண்காட்சி நடத்தப்பட்டிருக்க முடியும். காலம் தவறிய அறிவிப்பால், கண்காட்சி நடத்தும் வாய்ப்பு குறையும். அறிவிப்பு மட்டுமே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.