மதுரை அருகே லஞ்சம் வாங்கியதாக அரசு மருத்துவமனை அமைச்சுப் பணியாளர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ளது செட்டியபட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் அழகர்சாமி (40). இவர் பேரையூர் அரசு தாலுகா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு, பால், ரொட்டி அளிக்கும் ஒப்பந்ததாரராகச் செயல்பட்டுவருகிறார். நோயாளிகளுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கியதில் மருத்துவமனை நிர்வாகத்திலிருந்து ரூ.40 ஆயிரம் அழகர்சாமிக்கு வரவேண்டியிருந்தது. பணம் பெறுவதற்கான ஆவணத்தை மருத்துவமனை நிர்வாகப் பிரிவு உதவியாளர் சுப்பிரமணி (56) தயார் செய்யவேண்டும். அழகர்சாமி பலமுறை அலைந்தும் குறிப்பிட்ட ஆவணத்தை சுப்பிரமணி தயார் செய்யவில்லை. மேலும், ஆவணத்தை தயார் செய்து பணம் கிடைக்க, தனக்கு ரூ.3 ஆயிரம் தரவேண்டும் என சுப்பிரமணி கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அழகர்சாமி மதுரை மண்டல லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் இசக்கி ஆனந்தனிடம் புகார் அளித்தார். இதனால் அழகர்சாமியிடம் ரசாயணம் தடவிய ரூபாய்த்தாள்களை அளித்து, அதை சுப்பிரமணியிடம் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் கூறினர். புதன்கிழமை காலையில் பேரையூர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற அழகர்சாமி அங்கு சுப்பிரமணியிடம் பணத்தை அளித்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் இசக்கி ஆனந்தன், ஆய்வாளர் சூர்யகலா ஆகியோர் சுப்பிரமணியை கையும் களவுமாகப் பிடித்தனர்.
லஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சுப்பிரமணியிடமிருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கைதான சுப்பிரமணி திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அமைச்சுப் பணியாளர் பிரிவில் பணிபுரிகிறார். அவர் கடந்த ஆண்டு முதல் பேரையூர் அரசு மருத்துவமனைக்கு அயல்பணியாக வாரம் ஒரு முறை சென்றுவருகிறார். இந்த நிலையில்தான் அவர் தற்போது லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.