முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுக எம்.எல்.எ. பெரியசாமி மீது தாக்குதல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார்

நெட்டப்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பெரியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேசிய

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

நெட்டப்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பெரியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே பிரிவு) புகார் செய்துள்ளது.

அதன் தலைவர் ஞானமூர்த்தி அனுப்பி புகார் மனு:

புதுச்சேரி மாநிலத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறை தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதை தடுக்க வேண்டிய வன்கொடுமைச் சட்டப்பிரிவானது வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளை முறையாக பதிவு செய்து தன்டணை வழங்காமல், அப்பாவி மக்களை வஞ்சிக்கிறது.

அதற்கு உதாரணமாக நெட்டப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பெரியசாமி கடந்த வாரம் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள சென்ற போது, கோவில் அறங்காவல் குழுவைச் சேர்ந்தவர்கள் அவரை கோவிலுக்குள் விடாமல் தடுத்ததுடன், அவரை சாதி பெயரை சொல்லி திட்டி, தாக்கியுள்ளனர்.

மக்களால், ஜனநாயக முறைப்படி, இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நெட்டப்பாக்கம் காவல் துறை அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்பட்டது கண்டனத்துகுறியது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் பெரியசாமி ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். ஆகவே ஆணையத் தலைவர் இத்தாக்குதல் நடத்திய அறங்காவல் குழுவைச் சேர்ந்த அத்தனை பேர் மீதும், அவர்களுக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்து செயல்பட்ட நெட்டப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பணிநீக்கம் செய்ய புதுச்சேரி காவல் துறை தலைவருக்கு உத்தரவிட வேண்டும்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் சாதிய வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெரியசாமிக்கு சட்டப்படி மனநிறைவு தரும்படி அமைந்தால்தான், எதிர்வரும் காலங்களில் அரசு துறைகளிலோ, காவல் துறைகளிலோ பொதுமக்களிடையே சாதிய வன்முறை கட்டவிழ்த்துவிடாமல் பாதுகாக்க முடியும்.

அப்படி தங்களின் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டும் ஆளுகின்ற அரசு தாமதப்படுத்தினால் அரசுக்கு எதிராக பலதரப்பட்ட போராட்டங்களை தேசிய தலைவர் ராம்தாஸ் அத்வாலே எம்.பி. தலைமையில் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.