மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீய எண்ணம் முறியடிக்கப்படும்: எச்.ராஜா
மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீய எண்ணம் முறியடிக்கப்படுமென பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.
மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீய எண்ணம் முறியடிக்கப்படுமென பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.
காரைக்காலில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக புதன்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது : நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு ஓராண்டு காலத்தை முடித்துள்ளது. அரசின் சாதனைகளை விளக்கவும், எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்கவும் நாடு முழுவதும் 5 ஆயிரம் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. காரைக்காலில் வருகிற 31-ம் தேதி நடக்கும் மக்கள் தொடர்பு இயக்கத்தில் நான் பங்கேற்கிறேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் விலைவாசி உயர்வு, கொள்கை முடிவு எடுக்கமுடியாத முடக்கம், பிரதமர் சுதந்திரமாக செயல்படமுடியாத நிலை, பொருளாதார வீழ்ச்சி இருந்தது. ஆனால் பாஜக அரசால், விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாடு வளர்ச்சி வீதத்தில் 4.4-ல் இருந்து 7.4 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. உலகில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளதென ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. ஆசிய கண்டத்தில் முன்னணியில் இருந்த சீனாவை இந்தியா வளர்ச்சி வீதத்தில் முந்துகிறது. இதற்கு நரேந்திரமோடி அரசின் செயல்பாடுகளே காரணம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கடைபிடித்த முறையால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் பாஜக அரசு, 214 நிலக்கரி சுரங்கங்களில் 33 சுரங்கத்தை ஏலம் விட்டதில் மட்டும் ரூ.2 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது. எந்தெந்த மாநிலத்தில் நிலக்கரி கிடைக்கிறதோ அதன் வருவாயை அந்தந்த மாநில வளர்ச்சிக்கே தர அரசு முடிவெடுத்துள்ளது. பொருளாதார பரவலாக்க நடவடிக்கையை பாஜக அரசு எடுத்துள்ளது.
நிலம் கையகப்படுத்தும் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தீய எண்ணத்துடன் செயல்படுகிறது. அடித்தட்டு மக்கள் எந்த வகையிலும் முன்னேறாமல் அப்படியே இருப்பதால் மட்டும் பயனடையமுடியுமென கருதும் கட்சிகள் அவை. இதற்கு மாற்றாக ஏழைகளும் நல்ல நிலைக்கு வரவேண்டுமென நினைக்கிறது பாஜக. எனவே இதுபோன்ற கட்சிகளின் தீய எண்ணத்தை பாஜக தகுந்த முறையில் முறியடிக்கும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நடந்த 2 ஜி முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. இதுபோன்ற வழக்குகளை ஓராண்டுக்குள் தீர்வுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
திமுக பல்வேறு சிக்கலில் உள்ளது. இதனை திசை திருப்பும் நோக்கிலேயே ஜெயலலிதா வழக்குத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது போன்ற முடிவுகளை அக்கட்சி எடுக்கிறது. பாஜகவையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் வலுப்படுத்த தீவிர கவனம் செலுத்துகிறோம். புதுச்சேரியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வரும் பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்றார் அவர்.