புதுச்சேரியில் சர்வதேச காற்றாடித் திருவிழா 4-ம் தேதி தொடக்கம்: சுற்றுலாத்துறை அமைச்சர் பெ.ராஜவேலு தகவல்
புதுச்சேரியில் சர்வதேச காற்றாடித் திருவிழா வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது என சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சர்வதேச காற்றாடித் திருவிழா வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது என சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு தெரிவித்துள்ளார்.
அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுற்றுலா துறை, கைட் லைப் பவுன்டேஷன் சார்பில் இரண்டாவது ஆண்டாக தற்போது சர்வதேச காற்றாடித் திருவிழா நடத்தப்படுகிறது. வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை இவ்விழா நடத்தப்படும். சுற்றுலா மேம்பாட்டுக்காகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்வகையிலும் இது நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு 100-க்கு மேற்பட்ட பெரிய, சிறிய வகை காற்றாடிகள் விடப்படும். கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும், பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும் காற்றாடி தொழில்முறை குழுவினர் பங்கேற்கின்றனர்.
மேலும் காற்றாடி விழாவின் ஒரு பகுதியாக 9 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு காற்றாடி தயாரித்தல் பயிறசிப் பட்டறை, காற்றாடி தயாரித்து பறக்க விடுதல், காற்றாடி கண்காட்சி, வைத்தி கன்னியம்மாள் அறக்கட்டளை சார்பில் கோலப்போட்டி, மாணவர்களுக்கான காற்றாடி கவிதைப் போட்டியும் நடத்தப்படுகிறது.
4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு முதல்வர் ரங்கசாமி காற்றாடி திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக ரூ.10 லட்சத்தை சுற்றுலா துறை ஒதுக்கி உள்ளது. வெற்றி பெறுவோர் பரிசுகளும் அளிக்கப்படும் என்றார் ராஜவேலு. கைட் லைப் பவுண்டேஷன் நிர்வாகி ராஜேஷ் நாயர் கூறியதாவது:
பல்வேறு வடிவங்களில் காற்றாடிகள் பறக்கவிடப்படும். 90 மீ உயரம் வரை காற்றாடிகள் பறக்கவிடப்படும். 18 காற்றாடி விடும் தொழில்முறை குழுக்கள் பங்கேற்கின்றன. சிறுவர்கள் பயிற்சிப் பட்டறையில் அனுமதி இலவசமாகும். காற்றாடி திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்ய வேண்டும். இ-மெயில் முகவரிfoundation000gmail.compondytourism000gmail.com, அல்லது 09895455115, 9488084667-ல் தொடர்பு கொண்டு 3-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
சுற்றுலாத்துறை செயலர் மிகிர் வரதன், இயக்குநர் முனியசாமி, சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் வையாபுரி மணிகண்டன் உடனிருந்தனர்.