சிறுமி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள் சிறையில் தற்கொலை முயற்சி: உறவினர்கள் சாலை மறியல்
புதுச்சேரி அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். இதையடுத்து அவர்களது உறவினர்கள் புதன்கிழமை கிழக்கு கடற்கரைச்சாலையில் மறியல் செய்தனர்.
புதுச்சேரி அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். இதையடுத்து அவர்களது உறவினர்கள் புதன்கிழமை கிழக்கு கடற்கரைச்சாலையில் மறியல் செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த டிஎன்.பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோர் இறந்து விட்டதால், தனது சகோதரர் வீட்டில் தங்கி வசித்து வந்தார். வீட்டின் அருகே இருந்த சிமெண்ட் கடையில் வேலை செய்து வந்த ராஜ்குமார் (26) என்பவருக்கும், சிறுமிக்கும் இடையே ஓராண்டுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது.
இதற்கிடையே நோணாங்குப்பம் படகுத்துறையில் இளநீரில் மயக்க மருந்து கலந்து அச்சிறுமிக்கு கொடுத்து ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்களாம்.
இச்சம்பவம் குறித்து குழந்தைகள் நலக்குழு பரிந்துரையின் பேரில் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ராஜ்குமார் மற்றும் புதுகுப்பத்தைச்சேர்ந்த கவினேஷ் மற்றும் சசிதரன் இரண்டு பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கவினேஷ் மற்றும் சசிதரன் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறை அறையில் தூக்கிலிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து அவர்களை காப்பாற்றிய சிறை அதிகாரிகள் கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர்களை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
உறவினர்கள் சாலை மறியல்
இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் மருத்துவமனையில் இருந்த இருவரையும் சென்று பார்த்தனர். சிறையில் இருந்தபோது அவர்களை காவல்துறையினர் பலமாக தாக்கியதால் தான் இருவரும் காயமுற்றனர். இதற்கு சிறைத்துறை அதிகாரிகள் தான் காரணம்., அவர்கள் மீது புதுச்சேரி அரசும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உறவினர்கள் சென்னை-புதுச்சேரி கிழக்குகடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காலாப்பட்டு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அழைத்து சென்றார்கள். சிறைத்துறை அதிகாரிகள் மீது புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரப்படுத்த உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.