தனியார் நிதிநிறுவன ஊழியரிடமிருந்து ரூ.8.5 லட்சம் பணம் பறிப்புபோலீஸார் விசாரணை
திருச்சியில் உள்ள தனியார் நிதிநிறுவன ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.8.5 லட்சம் பணத்தைப் பறித்துச் சென்றவர்கள் குறித்து போலீஸர் விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் உள்ள தனியார் நிதிநிறுவன ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.8.5 லட்சம் பணத்தைப் பறித்துச் சென்றவர்கள் குறித்து போலீஸர் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி கே.கே.நகர் அன்பழகன் தெருவைச் சேர்ந்த சேவியர் மகன் ஜாக்சன் டெப்ரெட்டீஸ் (27). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஜோசப் அருள்ராஜை அணுகி கமிஷன் அடிப்படையில் பழைய செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றி தருவதாகக் கூறினாராம்.
இதையடுத்து ஜோசப், தனது நண்பர்களான கீரனூரைச் சேர்ந்த ஜெகன், விவேக் பேசியுள்ளார். அவர்கள் பழைய நோட்டுகளையும், அதற்குரிய கமிஷனையும் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதிக்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டு, புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இருதரப்பினரும், சுப்பிரமணியபுரம் பகுதிக்கு கடந்த 23-ஆம் தேதி வந்த போது, ஜெகன், விவேக் தரப்பினர், இங்கு போலீஸ் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, விமான நிலையப் பகுதிக்கு அழைத்தனராம்.
இதை நம்பி ஜாக்சனும், ஜோசப் அருள்ராஜும் ரூ.8.5 லட்சம் பணத்துடன் திருச்சி பழைய விமான நிலைய பகுதிக்கு சென்றனராம். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த ஜெகன், விவேக் உள்ளிட்ட 7 பேர் ஜாக்சன் உள்ளிட்டோரை கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.8.5 லட்சம் பணத்தைப் பறித்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜாக்சன் டெப்ரெட்டீஸ் அளித்த புகாரின் பேரில், விமான நிலைய போலீஸர் வழக்குப் பதிந்து, ஜெகன், விவேக் உள்ளிட்ட 7 பேரைத் தேடி வருகின்றனர்.