அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாநில மாநாடு தொடக்கம்
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)(தேசிய மாணவர் அமைப்பின்) 21-ஆவது மாநில மாநாடு திருச்சி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)(தேசிய மாணவர் அமைப்பின்) 21-ஆவது மாநில மாநாடு திருச்சி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது.
மாநாட்டை குற்றாலம் சுவாமி விவேகானந்தர் ஆசிரமத்தின் நிறுவனத் தலைவர் அகிலானந்த மகராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாநாட்டிற்கு ஏபிவிபி-யின் தேசியத் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்பையா சண்முகம் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:
ஏபிவிபி மாநாட்டில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நமது நாட்டை உலகின் முதன்மையான நாடாக மாற்ற கனவு கண்டார். நமது பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை உலகின் முதன்மையானதாக மாற்றிக் காட்டுவார். இந்நிலையில் தமிழகம் நாட்டில் முதன்மையான மாநிலமாக மாற வேண்டும். இதனை ஏபிவிபியில் இருக்கும் மாணவர்களாகிய நீங்கள் லட்சியமாகக் கொள்ள வேண்டும். திறமைகளை வளர்த்துக்கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளையும், நடைமுறைகளையும் தெரிந்துக்கொண்டு லட்சியத்தை அடைய முழு முயற்சி எடுக்க வேண்டும்.
இதற்கு முதலில், அடுத்த 75-ஆவது அமர்வுக்குள் 5 லட்சம் இளைஞர்களை ஏபிவிபியில் சேர்த்து, லஞ்சம் - ஊழலற்ற நாட்டை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.
இதில் மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் எஸ்.சம்பத், மாநில செயலாளர் எம்.செந்தில், மாவட்ட பொறுப்பாளர் பி.ரவிச்சந்திரன் மற்றும் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். மாலையில் மது இல்லா தமிழகம் உருவாக வலியுறுத்தி திருச்சியில் பேரணி நடைபெற்றது.